சாளக்கிராமப் பலன்கள்

விஷ்ணுவின் அம்சமான சாளக்கிராமக் கற்கள் நேபாளத்தில் ஹரிபர்வத மலையின் அடிவாரத்தில் ‘சக்ர தீர்த்தம்' என்கிற கண்டகி நதியில் கிடைக்கின்றன. வைணவ சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களால் புனிதமாகப் போற்றப்படும் இக்கல் ஒரு சிறிய பள்ளத்துடன், சங்கு, சக்கரம் போன்ற அமைப்பில் இருக்கும். சாளக்கிராமத்திற்குப் பூஜை செய்கிறவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும். இந்தக் கறுப்புக் கற்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமே. மஹாவிஷ்ணு காக்கும் கடவுளாதலால், ஆபத்துக்கள் வராமல் காப்பார். சாளக்கிராம தானம் விஷ்ணுவைத் திருப்திப்படுத்தும். சாளக்கிராமத்திற்கு அபிஷேகம் செய்த நீரை உட்கொண்டால் பாபங்கள் அகலும் என்று பல பொதுவான பலன்கள் சொல்லப்படுகின்றன.
இருப்பினும், இதன் அமைப்பு மற்றும் நிறங்களைப் பொறுத்து இதன் பலன்களும் வேறுபடுகின்றன.
1. முற்றிலும் சிவப்பு நிறமாக இருக்கும் சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்' எனப்படுகிறது. இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
2. சக்கரம் போன்ற வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
3. முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்' என்பர்.
4. இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
5. வட்டவடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
6. குடைபோன்ற வடிவமுள்ள கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
7. சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்' எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
8. சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
9. சப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.
10. சாளக்கிராமக்கல் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.
-வயல்பட்டி கண்ணன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.