திருக்கார்த்திகை நாளில் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கமாக இருக்கிறது. சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் திரிபாக அறிஞர்கள் கூறுவார்கள்.
திரிபுரசம்ஹாரத்தினையும், அடிமுடி தெரியாவண்ணம் பிரம்ம விஷ்ணுக்களுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாக சொக்கப்பனை ஏற்றப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.
சொக்கப்பனை என்பது பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து, அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியைத் தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. பனை மரம் கல்பதரு என்றும், தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற் கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.
பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி, அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை நிகழ்வு அமைந்துள்ளது.