சைவக்கிரியைகள் பாவனை, கிரியை, மந்திரம் என மூன்று வகைப்படும்.
பாவனை என்பது எண்ணம்; கிரியை என்பது முத்திரையுடன் செய்யப்படும் செய்கை; மந்திரம் என்பது எண்ணத்துக்கேற்ற கிரியைகளின் பயன்களைத் தரவல்ல சொற்றொடர்.
கிரியைகள் செய்யும் போது அவைக்கேற்ற பாவனையுடனும் செய்யப்படல் வேண்டும். பாவனையற்ற கிரியைகள் பயனற்றவையாகும். பாவனை, மந்திரங்கள் அற்ற கிரியைகள் தேவர்களை மகிழ்விக்காது. அசுரர்களையே மகிழ்விக்கும். இதனால் புண்ணியத்துக்குப் பதிலாக பாவமே வந்து சேரும். எனவே, கிரியைகளை ஆற்றும் போது அனுட்டான விதிகளைப் பின்பற்றிட வேண்டும். ஒரு சைவனுக்கு வைதிக சந்தி, சைவ சந்தி என இருவகை உண்டு. இவற்றுள் வைதிக சந்தியைத் தான் ஒரு போது விட்டாலும், சைவசந்தியை சைவர்கள் செய்யாமல் விடலாகாது.
மேலும், திருமணம், சிரார்த்தம் போன்ற கிரியைகளைச் சைவக் குருக்களே செய்தாக வேண்டும் என்பது அனுட்டான விதி. பொருள் புரியாமல் மந்திரங்களை ஓதுதல் மிகப்பெரிய தவறாகும். சந்தியா தேவதை என்னும் போது, அது சிவசக்தியையே குறிக்கின்றது. அது அபரை, பராபரை, பரை என்னும் பேதங்களோடு விளங்குகின்றது. ஆத்மீக வளர்ச்சிக்கு வாழ்வில் தினமும் சந்தியாவந்தனம் போன்ற சைவ அனுட்டானங்கள் மிக அவசியமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.