"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஆன்றோர் வாக்கு. கோயில் தரிசனத்திற்குரிய மிகப்புண்ணிய நாட்களாக, சோமவாரம், மங்கள வாரம், வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், மாதப்பிறப்பு, சூரிய சந்திர கிரகண நாட்கள், சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, திருவிளக்கீடு, திருவெம்பாவை நாட்கள், ஆடிச்செவ்வாய், ஆவணிச் சதுர்த்தி போன்றவற்றைக் கொள்ளலாம். ஆலயங்களைக் கண்டால் மட்டும் போதாது. அங்கு நாம் வழிபடும் முறை, செய்ய வேண்டியவை, செய்யத் தகாதவை என்ற விதிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும்.
ஆசாரமில்லாது ஆலயம் செல்லல், ஆலய வாசலில் கால் கழுவாமல் உட்செல்லுதல், வீதியில் எச்சில் உமிழ்தல், சிரசிலே தோளிலே வஸ்திரம் தரித்தல், ஆண்கள் மேலாடை அணிந்து செல்லுதல், பாதரட்சையுடன் உட்செல்லுதல், விக்கிரகங்களைத் தொடுதல், ஆலய கோபுரம், ஸ்துாபி ஆகியவற்றின் நிழலை மிதித்தல், சுவாமிக்கும் பலிபீடத்துக்குமிடையே குறுக்கே செல்லுதல், அபிசேகம் இடம் பெறும் போதும், திரையிட்டிருக்கும் போதும் வணங்குதல், கோயிற் பிரசாதத்தைக் கீழே சிந்துதல், உட்பிரகாரத்திலே கால் நீட்டிக் கொண்டிருத்தல் போன்றவை செய்யத்தகாதவை.
ஆலயம் சென்றதும் முதலில் ராஜகோபுரத்தை வணங்கிய பின் உள்ளே சென்று சிவமந்திரத்தை உச்சரித்த வண்ணம் பலிபீடத்துக்கு அருகே நின்று பலி பீடம், கொடித்தம்பம், மூலவர் ஆகியவற்றை வணங்கி, பின் பரிவாரத் தெய்வங்களை வணங்க வேண்டும். பரிவாரத் தெய்வங்களுள் முதலில் வணங்கப்பட வேண்டியவர் விநாயகப்பெருமான் ஆவர். ஆலயத்தை வலம்வரும் போது 3 அல்லது 5 அல்லது 7 அல்லது 9 தரம் வலம் வருதல் முறையாகும். தரிசன முடிவில் சண்டேஸ்வரர் முன்னிலையில் நின்று தரிசன பலனைத் தந்தருளுமாறு வேண்டி வழிபடுதல் முறையாகும். இவ்வேளையில், சண்டேஸ்வரர் முன்னிலையில் பெரிய ஓசையில் கைகொட்டி வணங்குவதும், எமது ஆடையிலிருந்து நூலைத் தன்னும் பிரித்து அவர் சந்நிதியில் இடுதலும் நம் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இவை அவசியமற்றவை என்கின்றன சாஸ்திரங்கள்.
சண்டேஸ்வர மூர்த்தியின் தியான நிலைக்குப் பங்கம் வராமல் கைதட்டிப் பெரிய ஓசை எழுப்பாது நாம் எது இருவிரல்களை உள்ளங்கைகளிலே மெல்ல 2 தடவை தட்டி வணங்குதலே முறையாகும். இதனை தாளந்திரயம் என்பர். இதே போன்று சண்டேஸ்வர மூர்த்தியை வலம் வந்து வணங்குதலும் முறையன்று. காரணம், நாம் வலம் வரும் போது நமது நிழல் மூர்த்தியின் மேல் விழாமல் இருப்பதற்கேயாகும். இதற்காகவே சில ஆலயங்களில் சண்டேஸ்வர மூர்த்தியை அடியார்கள் வலம் வராத வண்ணம் அவரது சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். மேலும் சிவனாரால் சண்டேஸ்வர பதம் இவருக்கு அளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் வண்ணம் சிவ பெருமான் தனக்கு நிவேதித்த உணவு, உடை, மாலை ஆகியவற்றை இவருக்கு வழங்கி சண்டேஸ்வர பதமும் அளித்தார் என்பது பெரியபுராண வரலாறு. எனவே பூசை முடிந்ததும் சிவனாருக்கு நிவேதித்த அத்தனையும் சண்டேஸ்வரருக்கு வழங்கிய பின்னரே அடியார்களுக்கு பிரசாதம் வழங்குதல் முறையாகும்.
“உண்ட கலமும் சூடுவனவும் சண்டேஸ்வரப் பதமும் தந்தோம்..." என இறைவன் திருவாய் மலர்ந்தருளியதாக பெரியபுராணம் கூறுகின்றது. சிவனார் தனக்குச் சூடிய கொன்றை மாலையை சண்டேஸ்வர மூர்த்திக்கு சாற்றுவதாக சண்டேஸ்வர அனுக்கிரக மூர்த்தத்தை குறிக்கும் சிலை, கங்கை கொண்ட சோழபுரத்திலே உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.