ஆறுமுகனான முருகப்பெருமானின் தோற்றம், வரலாறு, சூரன் போர், அதன் நோக்கம், சூரன் அவனது தம்பியர் இயல்பு, வர வலிமை பற்றிக் கந்த புராணம் கூறியுள்ளது.
உயிர்களிடத்துள்ள மும்மலங்கள் அடங்கினால், ஒடுங்கினால்தான் ஆன்மா இறையை அறியமுடியும், புரிய முடியும், உணர முடியும். ஈற்றில் அவனை அடைய முடியும் என்பதைக் கந்தபுராணம் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.
சூரன் போர் நிகழ்வில் சூரன், சிங்கன், தாரகன் ஆகிய மூவரும் மும்மலங்களைக் குறிக்கின்றனர். அவற்றை ஆன்மாவிலிருந்து பிரித்து இறைவன் தன்னோடு சேர்த்துக் கொள்வதே கந்தபுராணமும் அதில் இடம் பெறும் சூரன் போரும் சுட்டி நிற்கின்றன.
முருகப்பெருமான் தனக்குப் பிடித்த வள்ளிநாயகியை தினைப்புனத்திலே சந்திக்கின்றார். அப்போது வள்ளியின் தந்தை நம்பிராஜன் அவ்விடம் வரவே முருகப்பெருமான் தம்மை மறைத்து வேங்கை மரமாகின்றார். இந்த வேங்கை மரம் மூலம் ஒரு தத்துவம் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.
பாலின் நிறம் வெள்ளை. எல்லா மரங்களினதும் பாலின் நிறமும் வெள்ளை. ஆனால் வேங்கை மரத்தின் பாலின் நிறம் சிவப்பு. மிருக இனத்தில் வேங்கை பிற உயிர்களின் இரத்தத்தை குடித்து வாழ்கிறது. "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பர். ஆனால், தாவர இனத்தில் வேங்கையோ இரத்த நிறம் கொண்ட தனது பாலைக் கொடுத்து மனிதனை மிருகங்கள் போல் கொலை வெறி கொண்டு அலையாது தடுத்து நிற்கிறது. தாவர வேங்கைபோல் பிற உயிர்களுக்கு நன்மை செய் என்பதை முருகப்பெருமான் வேங்கை மரமாகி நின்ற தத்துவம் விளக்கி நிற்கிறது.
முருகப்பெருமானின் ஆறு திருமுகங்களும் அன்பையும், அருளையும், ஞான ஒளியையும், அழகையும், வீரத்தையும், வளமான வாழ்வினையும் தன்னடியார்களுக்கு உணர்த்தி நிற்கின்றன.