சிவபெருமானைத் தாண்டக வேந்தர் என அப்பர் சுவாமிகள் பாடியுள்ளார். பஞ்சகிருத்தியங்கள் எனப்படும் ஐந்தொழில்களும் ஐயனின் தாண்டவத்துள்ளேதான் அடங்கியுள்ளன.
சிவபெருமானது தாண்டவத்தால் பிரபஞ்சமே இயங்குகின்றது. அவனன்றி அணுவும் அசையாது என்பதும் இதையே குறிக்கின்றது. "நடனமாடும் பாதன்" என்றும் "ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண” என்றும், "நடனமாடினார் வெகு நாகரிகமாகவே" என்றும், "தூக்கிய திருவடி தனை நம்பினேன்' என்றும் கவிஞர்களைப் பாட வைத்தது ஐயனின் தாண்டவமே.
சிவனார் ஆடிய தாண்டவம் 108 ஆகும். அவற்றுள் பன்னிரண்டு தாண்டவங்களை முக்கியமானதாகக் குறிப்பிடுகின்றனர்.
1. ஆனந்தத் தாண்டவம்
இது சிவபெருமான் மூவுலகங்களையும் உருவாக்கிய போது ஆடிய தாண்டவம்.
2. சிருங்கார தாண்டவம்
சிவபெருமான் தன் சக்தியான பார்வதி தேவியோடு ஆடிய தாண்டவம்.
3. முனி தாண்டவம்
சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் முன் ஆடிய தாண்டவம்.
4. சந்தியா தாண்டவம்
இது சந்தியா காலம் என்னும் மாலைப்பொழுதில் ஆடிய நடனமாகும். இந்தத் தாண்டவம் லயம், இசைக்கருவிகள் ஆகியவற்றை உருவாக்க ஆடிய தாண்டவம் ஆகும்.
5. ஊர்த்துவ தாண்டவம்
சக்தியின் ஒரு அம்சமான காளியின் செருக்கை அடக்க சிவனார் ஆடிய தாண்டவம்.
6. திரிபுரதாண்டவம்
சிவபெருமான் வானையும் பூமியையும் அடக்கி இயக்குவதை இத்தாண்டவம் குறித்து நிற்கின்றது.
7. புஜங்க தாண்டவம்
திருப்பாற்கடலைக் கடைந்த போது இறைவன் ஆடிய தாண்டவம்.
8. கௌரி தாண்டவம்
சக்தியோடு சேர்ந்து சிவபெருமான் ஆடிய தாண்டவம் பூத தாண்டவம். இது ஆயுதங்களை ஏந்திய வண்ணம் சிவனார் ஆடிய தாண்டவமாகும்.
9. சம்ஹார தாண்டவம்
தனது பெற்றோருக்காகத் தன் ஆயுளை நீடித்துத் தர வேண்டும் எனச் சிவனை ஆராதித்த மார்க்கண்டேயருக்காக மறலியை எதிர்த்து சிவன் ஆடிய தாண்டவமாகும்.
10. பிரளய தாண்டவம்
உலக முடிவில் சிவபெருமான் ஆடிய கோரத் தாண்டவமாகும்.
11. மாறி ஆடிய தாண்டவம்
இது மதுரையிலே குலசேகர பாண்டியனது வேண்டுகோளுக்கிணங்க வலது காலைத் தூக்கி இடது காது முயலகன் மீது ஊன்றிய வண்ணம் சிவபெருமான் ஆடிய தாண்டவமாகும். இதையே சந்தியா தாண்டவம் என சிவபுராணம் கூறுகின்றது.
12. காளிகா தாண்டவம்
இது படைத்தல் தொழிலைக் குறிப்பது எனத் திருப்புத்தூர் புராணம் கூறுகின்றது. அப்பர் சுவாமிகள் திருவடி தீட்சை பெற்ற தலமாகிய திருநல்லூரில் இத்தாண்டவக் கோலத்தைக் காண லாம். எண் சுரஸ்களில் வலது புற 4 கரங்களிலும் துடி, பாசம், சூலம், அபயகாரம் ஆகியவையும், இடது புற 4 கரங்களிலும் அனல், மணி, காபலம் வீசிய கரஹங்தம் ஆகிய தோற்றத்துடன் சிவனார் எண்கரங்களோடு காட்சி தருகின்ற தாண்டவக் கோலம் இது.