உணவுப் பதார்த்தங்களை இறைவனுக்கு நிவேதித்தல் என்ற பெயரில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. கோயிலில் பூசையின் போதும், இல்லங்களில் விழா நாட்களிலும் தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கின்றோம். நாம் வாழும் பிரபஞ்சமே சிவபெருமானுடையது. அவ்வண்ணமிருக்க, அதிலிருந்து பொருட்களைப் பெற்று இறைவனுக்கு நிவேதித்தாக வேண்டுமா? என்று கேட்கலாம். அது உண்மைதான் - பிரபஞ்சம், அதில் நிறைந்துள்ள பொருட்கள், ஏன் நாம் கூட இறைவனது சொத்துகள்தான். இவற்றையெல்லாம் படைத்து, இவ்வுலகில் நாம் சுகமாக வாழ உதவிய இறைவனுக்கு நன்றியாக முதலில் அவனுக்கே படைக்கின்றோம்.
தெய்வங்களுக்கு நிவேதித்தல் என்பது மரபு வழியாக வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும், நம் வீட்டளவில் எனும் போது நெய்வேத்திய உணவுகள் சாதாரண உணவாகத்தான் இருக்கும். ஆனால், அவை இறை முன்னிலையில் படைக்கப்பெற்று, மந்திர ஜெபம் செய்யப்பெற்று, தீபம் காட்டப்பட்ட பின்பு, அந்த நைவேத்தியம் பிரசாதமாகின்றது.
பூசையில் அந்த உணவுப் பதார்த்தங்கள் சாதாரண உணவாக அமையாது, தெய்வப் பிரசாதமாக அருள் நிறைந்து பெறப்படுகின்றது. இது நைவேத்தியத்தின் மகிமை. அத்துடன் இறைவனுக்குப் பிடித்த நிவேதனத்ததை நிவேதித்து விட்டோம் என்ற மனத் திருப்தியும் நமக்குக் கிடைக்கின்றது. இதுவே நைவேத்தியங்கள் படைப்பதன் மகிமையும் பொருளுமாகும்.
எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த உணவுப் பதார்த்தத்தை நிவேதிக்க வேண்டும் தெரியுமா?
சிவபெருமான் - புளியோதரை, பஞ்சாமிர்தம்
சக்தி - பாயாசம்,பொங்கல்
விநாயகர் - மோதகம், கொழுக்கட்டை, அவல், தேன்
முருகன் - பஞ்சாமிர்தம், தேன்
விஷ்ணு - தயிர்ச்சாதம்
இலட்சுமி - தேன்
சரஸ்வதி - அவல், கடலை, பொங்கல்
வைரவர் - வடைமாலை
ஆஞ்சனேயர் - வெற்றிலை, கடலை, வெண்ணெய்
வீரபத்திரர் - பானகம்
என்று பக்தியுடன் நிவேதித்தல் உகந்தது.
சர்க்கரைப் பொங்கலை நிவேதிப்பதால் செல்வவளம் கிடைக்கும்.
புளியோதரையை நிவேதிப்பதால் பிணி நீக்கம் கிடைக்கும்.
கற்கண்டு, அன்னம் நிவேதிப்பதால் மங்களம் கிடைக்கும்.
தயிர், அன்னம் நிவேதிப்பதால் செயல் வெற்றி கிடைக்கும்.
பால் அன்னம் நிவேதிப்பதால் அரச யோகம் கிடைக்கும்.
தேங்காய் அன்னம் நிவேதிப்பதால் இலட்சுமிகரமாக இருப்பதுடன் அனைத்து வளமும் கிடைக்கும்.
மிளகு அன்னம் நிவேதிப்பதால் பிணி நீக்கம் கிடைக்கும்.
பருப்புப் பொங்கல் நிவேதிப்பதால் செயல் வெற்றி கிடைக்கும்.
பாயாசம் நிவேதிப்பதால் தானிய விருத்தி கிடைக்கும்.
வடைமாலை நிவேதிப்பதால் ஆரோக்கிய பலம் கிடைக்கும்.
அப்புறமென்ன, உங்கள் வேண்டுதலுக்கேற்ற நைவேத்தியம் செய்து பலன்களைப் பெறுங்கள்.