வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு
சித்ரா பலவேசம்
வெள்ளெருக்கு எனப்படும் தாவரம் பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையில்லாமல் இருந்தாலும், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது என்கின்றனர். மேலும் இந்த வெள்ளெருக்கு அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இந்த வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியைக் கொண்டு சிறிய அளவிலான விநாயகர் உருவம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
வெள்ளெருக்கிலான விநாயகர் உருவங்கள் பூசைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கிறது. இவற்றில் வெள்ளெருக்கின் வேர்ப்பகுதியைக் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் உருவங்களை அனுபவமுடையவர்களின் துணையுடன் வாங்குவது நல்லது. (சில கடைகளில் வெள்ளெருக்கின் தண்டுப்பகுதியில் செய்யப்பட்டதும், பிற தாவர வகைகளில் செய்யப்பட்டதுமான விநாயகர் உருவங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்)
சுத்தமான வெள்ளெருக்கு வேரில் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தினை வாங்கி, அதன் மேல் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் இராகு காலத்தில் அரைத்த மஞ்சள் கலவையைத் தடவி நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுத்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் இராகு காலத்தில் அரைத்த சந்தனக் கலவையை அதன் மேல் தடவி நிழலில் காய வைத்துப் பூசையறையில் வைத்து வழிபடலாம்.
இப்படி வெள்ளெருக்கு விநாயகரைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கிச் செல்வச் செழிப்புடன் வாழ முடியும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.