நவராத்திரி வரலாறும் வழிபாடும்
சித்ரா பலவேசம்
சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.
மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள்.
அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் இருவரும் இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அப்போது தேவி, “யார் என்னைப் போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் நான் மணப்பேன்’ என்று தான் சபதம் செய்திருப்பதாகத் தெரிவிக்கிறாள்.
அதற்குச் சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. சாதாரண பெண்ணான நீ எங்களிடம் வீணாகப் பேசுவதா? பேசாமல் எங்களுடன் வா...” என்றனர்.
அதற்கு தேவி, “நான் தெரிந்தோ, தெரியாமலோ சபதம் செய்து விட்டேன். நீங்களிருவரும் உங்கள் அரசர்களிடம் சொல்ளுங்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு வாருங்கள்…” என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் தங்களது படையிலிருக்கும் அசுரர்கள் ஒவ்வொருவராக அனுப்பினர்.
அவர்கள் அனைவரையும் தேவி அழித்தாள். அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். அவன் கடுந்தவம் செய்து, அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான் என்றும், அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான் என்றும் ஒரு வரம் பெற்றிருந்தான்.
தேவி ரக்த பீஜனை அழிக்கத் துவங்கிய போது, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றிக் கொண்டேயிருந்தான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. இதைக் கண்ட தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடித்து விடச் சொன்னாள்.
சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேறி, இறந்து போனான்.
கடைசியாக சும்பன், நிசும்பன் இருவரும் தேவியால் அழிக்கப்படுகின்றனர்.
இதனடிப்படையிலேயே தேவியை நவராத்திரி நாட்களில் வணங்கும் வழக்கம் தொடங்கியது என்று தேவி மகாத்மியத்தில் வரும் புராணக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
நவராத்திரி காலம்
நவராத்திரி புண்ணிய காலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. நவராத்திரி நோன்பு புரட்டாசி மாதத்தில் நவக்கிரகங்களில் தலைமையாக உள்ள சூரியன், கன்னி இராசியில் இருக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இரவுக் காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் நிலை சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்று சொல்வதுண்டு. இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச் சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
தேவியை வழிபட உத்தராயணத்தில் வசந்த நவராத்திரி, தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரி என்று இரு நவராத்திரிகள் இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே அனைவராலும் கொண்டாடக் கூடியதாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நோன்பு சாரதா நவராத்திரி நோன்பு எனப்படுகிறது.
அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் வணங்கி வழிபட்டு, இந்த உலக வாழ்கை சிறப்பாக அமையத் தேவையான கல்வி, செல்வம், வீரம் எனும் மூன்றையும் முப்பெரும் தேவிகளிடம் வேண்டிக் கடைப்பிடிக்கப்படும் இந்த ஒன்பது நாட்கள் கொண்ட சாரதா நவராத்திரி நோன்புக் காலத்தில், முதல் மூன்று நாள்கள் தமோ குணமுடையவளான துர்கா பரமேஸ்வரியை வீரம், துணிவு வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குணமுடையவளான மகாலட்சுமியைச் சகல செல்வங்களையும் அளிக்க வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குணமுடையவளான சரஸ்வதியை கல்வி, அறிவு என்று அனைத்துக் கலை ஞானங்களையும் அளிக்க வேண்டியும் வழிபடுகிறார்கள்.
நவராத்திரி வழிபாட்டு முறை
நவராத்திரி நாட்களில் அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒரு உணவைப் படைத்து ஒவ்வொரு தேவியாக வணங்க வேண்டுமென்கிற நடைமுறை வழக்கத்திலிருக்கிறது. அது குறித்த அட்டவணையைக் கீழே காணலாம்.
நாள் |
தேவியின் பெயர் |
படைக்கும் உணவு |
முதல் |
சாமுண்டி |
சர்க்கரைப் பொங்கல் |
இரண்டு |
வராஹி தேவி |
தயிர்ச்சாதம் |
மூன்று |
இந்திராணி |
வெண்பொங்கல் |
நான்கு |
வைஷ்ணவி தேவி |
எலுமிச்சை சாதம் |
ஐந்து |
மகேஸ்வரி தேவி |
புளியோதரை |
ஆறு |
கவுமாரி தேவி |
தேங்காய்ச் சாதம் |
ஏழு |
மகாலட்சுமி |
கற்கண்டு சாதம் |
எட்டு |
நரசிம்ஹி |
சர்க்கரைப் பொங்கல் |
ஒன்பது |
ப்ராஹ்மி |
அக்கர வடசல், சுண்டல் |
நவராத்திரி கொலு
நவராத்திரி வழிபாட்டில் முக்கியமானது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைக்கப்படும் கொலுவாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் வடிவங்களாகக் கருதி நவராத்திரி நாட்களில் வழிபடுபவர்களுக்கு சகல நலங்களும் கிடைக்கும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாக இருக்கிறது.
நவராத்திரி கொலுவிற்கான மேடை 9 படிகள் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும். இந்த ஒன்பது படிகளிலும் கீழ்க்காணும் பொம்மைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
முதல் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகைப் பொம்மைகள்.
இரண்டாவது படி
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாவது படி
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நான்காவது படி
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாவது படி
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்.
ஆறாவது படி
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
ஏழாவது படி
மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகான்கள் போன்றோரின் பொம்மைகள்.
எட்டாவது படி
தேவர்கள், அட்டதிக்கு பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாவது படி
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
ஓரறிவு உயிராகத் தொடங்கிய வாழ்க்கை படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய முடியும் என்பதை உணர்த்துவதாக இந்தக் கொலு அமைப்படுகிறது.
வழிபடுவோம்
முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள். பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமாகக் கொள்கிறோம். மொத்தம் பத்து நாட்கள் நவராத்திரி பூசையைச் செய்து தேவியை வழிபடுவோம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|