தீபாவளி நாளில் கங்கா குளியல் ஏன்?
சித்ரா பலவேசம்
கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளான தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாளன்று கங்கா குளியல் செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்குக் கங்கா குளியல் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
தத்துவம்
கிருஷ்ணன் நரகாசுரனை அழித்த நாளன்று உலகிலுள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் கங்கையின் புனிதத்தைச் சிவபெருமான் வழங்குகிறார் என்பது தொன்ம நம்பிக்கை. இந்த தொன்ம நம்பிக்கையின்படி நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கங்கை நீராகவே கருதப்படுகிறது. தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகினால் நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பதும் இந்து சமயத்தினரின் நம்பிக்கை. இப்படி நீராடுவதைக் கங்கா குளியல் என்கின்றனர்.
நேரம்
சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய்க் குளியல் செய்யக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால், தீபாவளியன்று மட்டும் சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்தம், அதாவது ஒன்றரை மணி நேரம் முன்னதாக நீராட வேண்டும் என்பது வித்தியாசமான வழக்கமாக இருக்கிறது, இது ஏன் தெரியுமா? பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார். எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார். எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.
புனிதப் பயன்
தீபாவளி நாளில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் துன்பங்கள் விலகிப் புனிதப் பலன்கள் கிடைக்கும். அன்றைய தினத்தில் எண்ணெய்யில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய்க் குளியல் செய்பவர்க்குக் கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிடைக்கும் என்கின்றனர்.
பயன் பெறுவோம்
தீபாவளியன்று மனிதர்களாகப் பிறந்த அனைவரும் கங்கா குளியல் செய்வது அவசியம் என்றும், முனிவர்களும் அன்று எண்ணெய் தேய்த்துக் கங்கா குளியல் செய்து கொள்ள வேண்டும் என்றும் இந்து சமய புராணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே தீபாவளி நாளில் கங்கா குளியல் செய்து அதன் பயன்களைப் பெற முயல்வோம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.