திருநீறு - சிறப்புகள்
கணேஷ் அரவிந்த்

தீவினைகளை நீறு படுத்துவதனால் ‘திருநீறு’ எனவும், அழியாத செல்வத்தைக் கொடுப்பதனால் விபூதி (வி - மேலான, பூதி - செல்வம், மேலான செல்வம் என்பது பொருள்) எனவும், ஆன்மாக்களிடம் உள்ள மலமாசைக் கழுவுவதால் ‘சாரம்’ என்றும், அறியாமையை அழித்து ஞானத்தைத் தருவதால் ‘பசிதம்’ என்றும், பெயர் வந்தது.
திருநீறு அணிபவர்களுக்கு மேலான செல்வத்தைக் கொடுக்கும். ஐந்தெழுத்தை ஓதி உணர்ந்து திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்.
திருநீறு குறித்த பாடல்கள்
”கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூச மகிழ்வாரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே” (திருமந்திரம்)
“முக்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே” (திருஞானசம்பந்தர்)
கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால்
வருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர் அரனே”(திருநாவுக்கரசர்)
“பாடற்கு இனிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் ‘சிவாயநம’ என்று இடுநீறே
பிணிகொள் வனபவம் நீக்கும் வெண்ணீறு” (திருவருட்பா)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.