ஆன்மிகத் தகவல்கள்
சித்ரா பலவேசம்
புண்ணியமும் பாவமும்
*சொல்வதனால் குறைந்து போகும் பொருள்கள் இரண்டு. அவை புண்ணியம், பாவம்.
நீ செய்த புண்ணியங்களை – தருமங்களை – நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும்.
நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.
குறைய வேண்டியது பாவம்; நிறைய வேண்டியது புண்ணியம்.
ஆதலால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே; பாவத்தைக் கூறு.
*****
மூன்று அழுக்குகள்
மனிதனிடத்தில் தோன்றும் அழுக்கு மூன்று வகையாகும். அவை;
1. மன அழுக்கு - பொறாமை, ஆசை, கோபம், பகை
இந்த மன அழுக்கைத் ‘தியானம்’ என்ற நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும்.
2. வாயழுக்கு - பொய், புறங்கூறல், தீச்சொல்
இந்த வாயழுக்கை ‘துதி’ என்னும் நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும்.
3. மெய்யழுக்கு - கொலை, புலை, பிறன்மனை நயத்தல், களவு முதலியன.
இந்த மெய்யழுக்கை ‘அர்ச்சனை’ என்னும் நீரால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும்.
*****
இறைவனின் கருணை
வணக்கமும் வழிபாடும் மட்டும் இறைவனின் கருணையைப் பெறும் வழி இல்லை.
துன்பமுற்றுத் துடிக்கிற உயிர்களிடம் கருணை செய்து, அவற்றின் துன்பத்தை நீக்க வேண்டும்.
பிற உயிர்களிடம் கருணை செய்தால் கடவுள் உன்னிடம் கருனை செய்வார்.
*****
மனைவி மக்களுக்கு மட்டும்
மனைவி மக்களுக்கு நிரம்ப வேண்டும் என்று நினைத்துப் பொய்யும் வஞ்சனையும் செய்து பொருளைத் தேடக் கூடாது. அப்படித் தேடுவதனால், தேடிய பொருள் மனைவி மக்களையடைந்தாலும் அது அவர்களுக்குத் தீமையையே ஏற்படுத்தும். அதனால் வரும் பாவங்கள் அனைத்தும் உயிருடன் தொடர்ந்து வந்து அடுத்த பிறவியிலும் துன்பத்தைத் தரும்.
அறநெறியில் பொருளை ஈட்டி, அடுத்தவர்களுடன் பகிர்ந்துண்டு புண்ணியத்தைத் தேடினால், அப்புண்ணியம் உயிர்களுக்கு அடுத்த பிறவி இல்லாத நிலையை அடைந்து இறைவனின் நிழலில் சென்று அமைதியடையும்.
*****
மனிதனுக்கு நரைப்பது ஏன்?
மனிதனுக்கு மட்டும் நரைக்கிறது. வேறு எந்த விலங்குகளுக்கும் நரைப்பதில்லை இது ஏன் தெரியுமா?
விலங்குகள் அனைத்தும் உண்பதும் உறங்குவதுமாகத்தான் இருக்கும். அதற்கு வேறு எந்த சிந்தனைகளும் இருக்காது.
ஆனால், மனிதன் மட்டுமே இறைவனை அடையும் சிந்தனையுடனிருக்கிறான். அவன் குறிப்பிட்ட காலம் குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், அவன் கடைசிக் காலத்தில் இறைவனை அடைவதற்கான சிந்தனைகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும், அதை அவனுக்கு உணர்த்தும் விதமாகவும் அவனுக்கு நரைக்கத் தோன்றுகிறது. நரை வந்து விட்டால் அவன் இறைவனை அடைவதற்கான நற்செயல்களைச் செய்யத் தொடங்க வேண்டும்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.