கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகைப் புழுக்கள் தனக்குப் பாதுகாப்பிற்காகக் கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு. சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்று பருத்த திடசங்குகள் ஆண் சங்குகள். சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள். ஒரு சங்கின் சுருள் பகுதி அதனுடைய வாய் பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரிச்சங்கு எனப்படும். ஒரு சங்கின் சுருள் பகுதி அதன் வாய் பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு. வலம்புரிச் சங்கு, இடம் புரிச்சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த வலம்புரிச்சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.
தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒரு பங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு. நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு. ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம் புரிச்சங்கு. இந்தச்சங்கைக் காதில் வைத்துக் கேட்டால் `ஓம்' என்ற சப்தம் கேட்கும். வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும் பலவித நன்மைகள் கிடைக்கும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
வலம்புரிச் சங்கு பூஜை
சுத்தமான நீரில் சங்கைக் கழுவிச் சந்தனம், குங்குமம், பூ வைத்துச் சங்கின் பிளந்த பாகம் வெளிப்பக்கமாகத் தெரியும் படி வைத்து, அதில் மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பிறகு;
“ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம்
பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே
பாவமானாய தீ மஹி
தந்தோ சங்க ப்ரசோதயாத்”
என்ற சங்கு காயத்ரியை 3 முறைச் சொல்லி, சங்கில் குபேரனை அழைக்க வேண்டும். பிறகு,
“ஓம்நவ நிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம்”
என்று சிவப்பு மலரைப் பாட வேண்டும்.
மூன்று முக நெய் தீபம் ஏற்றி வைத்துப் பெரிய தட்டில் பச்சை அரிசி போட்டு, அதன் மேல் சங்கு வைத்துக் குபேரன் படத்தின் முன்பாக வைக்க வேண்டும். துளசி, அரளி, சிவப்பு மலர் மல்லிகை கலந்து பன்னிரைத் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றிலும் மலர் போடவும்.
“ஓம் சங்க நிதியே சரணம்
பத்மநிதியே சரணம்
மகா பத்ம நிதியே சரணம்
சங்காக்ய நிதியே சரணம்
மகராக்ய நிதியே சரணம்
சுகச்சப நிதியே சரணம்
முகுந்த நிதியே சரணம்
குந்தாக்ய நிதியே சரணம்
ஓம் நீலநிதியே சரணம்”
என்று நலநிதிகளை நினைத்து வழிபட வேண்டும்.
வலம்புரிச் சங்கின் பயன்கள்
* செல்வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்ல பட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்து பால் பாயசம் செய்து பசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் எல்லா விதச் செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்குப் பூஜை செய்யலாம்.
* ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக் குடித்துவிட்டு, சிறிது நீரை வீட்டு வாசற்படியில் தெளிக்கவும். இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும். ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில் பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.
* குழந்தைகளுக்கு இதில் பசும் பால் ஊற்றி வைத்துப் பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். வலம்புரிச்சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் நோய்கள் நீங்கும்.
* வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
* வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
* அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்குமம், அர்ச்சனை செய்து வரக் கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
* பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது.
* மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக்கூடாது.
* சங்கிற்குச் சந்தனம், குங்குமம் வைத்துப் பித்தளை அல்லது வெள்ளித் தட்டில்தான் அதை வைக்க வேண்டும். தரையிலோ அல்லது எவர்சில்வர் தட்டிலோ வைக்கக் கூடாது.