மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.
எனவே சிவபெருமானின் தலவிருட்சமாக இருக்கிறது. சிவபெருமான் அர்ச்சனைக்கு உகந்தது வில்வத்தை வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர்.
வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்துகின்றனர். வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியன் உதிப்பதற்கு முன்னதாக பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.
வில்வ மரத்திலிருந்து இலையைப் பறிக்கும் போது அம்மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும் என்கின்றனர்.
“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ—ர விஷவைத்யஸ்ய ஸ–ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே”
பொருள் விளக்கம்
போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன். ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.
பலன்கள்
வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டுப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானை வழிபட்டால் கீழ்க்காணும் நற்பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.
* ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும், துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
* தினமும் சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.
* மகாசிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்திச் சிவபெருமானைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
* சிவபெருமானுக்கு பிடித்த வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண மலருக்குச் சமமாகும்.
* வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.