சிவனுக்கு ஐந்து வித சிவராத்திரிகள் புனிதமானவை என்று கூறப்படுகிறது.
1. யோக சிவராத்திரி - யோகத்தின் மூலம் ஒரு யோகி தனக்கென ஒரு இரவை உருவாக்கிச் சிவனை வழிபடும் சிவராத்திரி
2. நித்திய சிவராத்திரி - தினமும் வருவது.
3. பக்க்ஷ சிவராத்திரி - இரு வாரங்களுக்கு ஒரு தடவை வருவது.
4. மாத சிவராத்திரி என்பது மாதம் ஒரு முறை வருவது
5. மகா சிவராத்திரி - ஆண்டுக்கு ஒரு முறை வருவது
மகாசிவராத்திரி என்ற சமஸ்கிருதச் சொல்லின் கருத்து சிவனுக்குரிய பெரிய அல்லது சிறந்த இரவு என்பதாகும். மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசியில் வரும் இந்தச் சிவராத்திரி ஒரு பண்டைய சமய விழாவாகும். இந்து சமய விழாக்களிலிருந்து சிவராத்திரி மாறுபட்டுள்ளது. பெரும்பாலான இந்து சமய விழாக்கள் விரதத்திலும், வழிபாட்டிலும் ஆரம்பித்து விருந்தில் நிறைவடைவனவாகும். ஆனால் சிவராத்திரியின் போது முழு நாளும் சிவ வழிபாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. மனித வாழ்வில் தினமும் செய்யப்படும் இரண்டு முக்கிய செயல்களான உணவு உண்ணுதலும், இரவு உறக்கமும் இல்லாமல் சிவ வழிபாடு செய்வது மகாசிவராத்திரியின் சிறப்பாகும்.
சிவபுராணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும்படி மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு நிலைகள் இருக்க வேண்டும்.
1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் - ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் - நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
3. உணவு நிவேதித்தல் - நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
4. தீபமிடுதல் - வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை வழங்கும்.
5. எண்ணெய் விளக்கேற்றுதல் - ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
6. வெற்றிலை அளித்தல் - உலக இன்பங்களில் மகிழ்ச்சியைக் குறிக்கும்.
இந்த ஆறு நிலைகளையும் சிவராத்திரி நாளில் வீட்டிலோ அல்லது கோயிலிலோ கடைப்பிடிக்க வேண்டும்.
சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது வழிபடுவதற்கான வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
1. முதல் யாமம் - தாமரை மலரால் அர்ச்சித்து பொங்கலைப் படைத்து, ருக்கு வேதம் சொல்லி வழிபடவேண்டும்.
2. இரண்டாவது யாமம் - துளசி இலையால் அர்ச்சித்து, பாயாசம் படைத்து, யசுர் வேதம் சொல்லி வழிபட வேண்டும்.
3. மூன்றாவது யாமம் - வில்வம் இலைகளால் அர்ச்சித்து, எள்ளும் மாவும் கலந்த உணவைப் படைத்து, சாமவேதம் சொல்லி வழிபட வேண்டும்.
4. நான்காவது யாமம் - நீலோத்பல மலர்களால் அர்ச்சித்து, எளிமையான ஒரு உணவைப் படைத்து, அதர்வன வேதம் சொல்லி வழிபட வேண்டும்.
* விரதம் மேற்கொள்பவர்கள் மறுநாள் காலை வரை சிவனுக்குப் படைத்த உணவுப் பொருட்களை உண்ணுதல் கூடாது.