ஒரு நாள் அரபிக்கடலில் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் கப்பல் ஒன்று திணறியது. அந்த சமயத்தில் புயல், மழை என்று எதுவுமில்லை. டச்சு நாட்டைச் சேர்ந்த கப்பலின் தலைமை மாலுமி, கப்பல் நகர முடியாமலிருப்பதை நினைத்துக் கவலைப்பட்டார்.
அப்போது அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர், இந்தக் கடற்கரையின் அருகில்தான் வர்க்கலை ஜனார்த்தனர் கோயில் இருக்கிறது. அவரை வேண்டிக் கொள்ளுங்கள், நல்லது நடக்கும் என்று சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டவர் ஒருவர், “ஆபத்திலிருக்கும் வேளையில், அதிலிருந்து மீள முயற்சி செய்யாமல், உங்கள் நாட்டில் தவளை கத்துவதையும், பல்லி கத்துவதையும் வைத்து முடிவு செய்வது சரியல்ல” என்றார்.
ஆனால், கப்பலின் தலைமை மாலுமி எப்படியாவது இந்த ஆபத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்துடன் அங்கிருந்தபடி வர்க்கலை ஜனார்த்தனரை நினைத்து வேண்டினார்.
அடுத்த நிமிடம் கப்பல் மெதுவாக நகரத் தொடங்கியது. அங்கிருந்து அந்தக் கப்பல் துறைமுகம் சென்றதும், தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய ஜனார்த்தனர் கோயிலுக்குச் சென்ற மாலுமி, பெரிய மணி ஒன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கினார்.
அந்தக் கப்பல் மாலுமி வழங்கிய மணி கோயில் கருவறையின் அருகில் பக்தர்களின் பார்வைக்கு இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.