பகீரதனின் விடாமுயற்சியால் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை சிவபெருமானிடம், “சுவாமி, பகீரதனின் தவப்பயனாலும், தங்களது ஆணையாலும், தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்து விட்ட என்னை, இந்தப் பூமியிலிருக்கும் அனைவரும் சிறப்பாகக் கருதி வணங்கச் செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.
சிவபெருமானும், “கங்கையே, பகீரதன் முன்னோர்களின் சாம்பல் உன்னில் கரைக்கப்பட்டு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கியது போல், மனிதர்கள் தங்களின் பல பிறப்புகளில் செய்த பல்வேறு பாவங்களும், உன்னில் நீராடினால் கரைந்து போய் விடும்” என்று கூறி கங்கா குளியலுக்குப் புதியதொரு சிறப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதைக் கேட்ட கங்கை, “சுவாமி, இங்கு குளிக்கும் மனிதர்களுடைய பாவங்கள் அனைத்தும் என்னிடம் சேர்ந்து கொண்டே இருந்தால், அந்தப் பாவங்களின் சுமையை நான் எப்படித் தாங்குவது? அந்தப் பாவங்களெல்லாம் என்னிடமிருந்து எப்போது நீங்குவது?” எனக் கவலையுடன் கேட்டாள்.
சிவபெருமான், “கங்கையே, இதற்காக நீ கவலையடைய வேண்டாம். மகான்கள், முனிவர்கள், புண்ணியவான்கள் போன்றோர் உன்னிடம் நீராடும் போது, உன்னிடம் சேர்ந்திருக்கும் பாவங்கள் அனைத்தும் கரைந்து விடும். அப்படிக் கரைகின்ற பாவங்கள் அனைத்தையும், நாள்தோறும் நீலவண்ணமான வங்கக் கடலில் கொண்டு போய்க் கரைத்து விடு” என்று கூறினார்.