ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த பௌர்ணமி நாட்களில் எப்படி வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்...
சித்திரை
சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் பொதுவாகச் சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறது. சித்திரகுப்தனின் பிறந்த நாளாகச் சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். மரண பயம் நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும்.
வைகாசி
வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்தர் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.
அன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
ஆனி
ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக மூல நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும். சுமங்கலித்தன்மை நிலைத்திருக்கும். ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்கக் காதல் கைகூடும்.
ஆடி
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட பதவி கிடைக்கும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும்.
ஆவணி
ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று ஓணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபடக் கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.
புரட்டாசி
புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினத்தில் அம்மைஅப்பர் வழிபாடு கடன் தொல்லையை நீக்கும். காரியத் தடங்கல் விலகும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அனைத்து நலங்களும் கிடைக்கும். நல்ல திருமணப்பேற்றினைத் தரும்.
ஐப்பசி
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக அசுவனி நட்சத்திரத்தில் வருகிறது. ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது.
அன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கார்த்திகை
கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி, பொதுவாகக் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில்தான் இறைவன் ஒளி வடிவாகக் காட்சியளித்தார்.
ஆலயங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
மார்கழி
மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாகத் திருவாதிரையில் வரும். அன்றைய தினம் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியருளிய நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நம் குறைகள் அனைத்தும் நீங்கும். நோய்கள் குணமாகும். காரிய வெற்றி கிடைக்கும்.
தை
தை மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாகப் பூசத்தில் வருகிறது. அன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிக் கடன் நீங்கி முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.
மாசி
மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக மகத்தில் வருகிறது. அன்றைய தினத்தில் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, மாசி மகம் போன்ற விழாக்கள் மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும்.
பங்குனி
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி, பொதுவாக உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி - பரமேஸ்வரர், முருகன் - தெய்வயானை, ராமன் - சீதை உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக நம்பிக்கை நிலவுகிறது. பங்குனி பௌர்ணமி வழிபாடு திருமணப்பேற்றினை அருளும்.
அன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.