ஒரே சிற்பி வடிவமைத்த ஐந்து நடராசர் செப்புச்சிலைகள்
சித்ரா பலவேசம்
பல்லவ மரபின் தோற்றத்துக்குக் காரணமானவனும், கெளட தேசத்திலிருந்து வந்தவனுமான சிம்மவர்மன், சிவபெருமான் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்தான். அவனுக்குச் சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஒன்றாய்க் கொண்ட நடராசர் தோற்றத்தைச் சிலையாக வடிவமைத்துச் சிதம்பரத்தில் வைத்து வழிபட வேண்டுமென்று விரும்பினான்.
அந்தக்காலத்தில் சிலை வடிவமைப்பில் புகழ் பெற்றிருந்த சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாய முத்து என்பவரை அழைத்து, அவரிடம் நடராசர் சிலை ஒன்றை வடிவமைத்துத் தரும்படி சொன்னான். மன்னனின் விருப்பப்படி அவரும் நடராசர் சிலையினைச் செப்புச் சிலையாக வடிவமைத்து அவனுக்குக் காண்பித்தார்.
அந்தச் செப்புச்சிலையின் வடிவத்தையும், அழகையும் கண்டு வியந்த மன்னன், செப்புச்சிலையை விடத் தங்கச்சிலையாகச் செய்தால் அதை விட, அழகாகவும், சிறப்பாகவும் இருக்குமே என்று நினைத்தான். அவன் சிற்பியிடம், அந்தச் செப்புச் சிலையைப் போன்றே தங்கத்தில் ஒரு சிலையைச் செய்யும்படிச் சொல்லி, அதற்குத் தேவையான தங்கத்தையும் கொடுத்தனுப்பினான்.
சிற்பிக்குச் சிறை
சிற்பியும் தூயதங்கத்தில் அடுத்த சிலையைச் செய்யத் தொடங்கினார். அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுப் பார்த்த போது, அதுவும் செப்புச்சிலையாகவே தோற்றமளித்தது. அதனைக் கண்டு கோபமடைந்த மன்னன், தான் சிலை செய்வதற்காகக் கொடுத்தத் தங்கத்தைச் சிற்பி திருடி விட்டதாக நினைத்து அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டான்.
அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், சிற்பி தங்கத்தைக் கொண்டே சிலை வடித்ததாகவும், தான் செப்புச்சிலையாக இருக்க விரும்பியதால் செப்புச்சிலையாகவே மாறி விட்டதாகவும் சொல்லிச் சிற்பியைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி சொன்னார். அதைக் கேட்ட மன்னன் சிவபெருமானிடம் தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டினான்.
சிதம்பரம்
அவனை மன்னித்த சிவபெருமான், “மன்னனே, உன் விருப்பப்படி உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, உனக்கு மட்டும் தங்கச்சிலையாகத் தோற்றமளிக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அது செப்புச்சிலையாகவே தோன்றும். முதலில் உருவாக்கிய செப்புச்சிலையை அந்தச் சிற்பியிடமே கொடுத்துத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லச் சொல்” என்றார்.
மறுநாள் காலையில் சிற்பியை விடுவித்த மன்னன், அந்தச் சிலையைத் தென்பகுதிக்குக் கொண்டு செல்லும்படி சொல்லி, அவருக்குத் துணையாகத் தனது படைவீரர்கள் சிலரையும் அனுப்பி வைத்தான். அதன் பிறகு, சிற்பி இரண்டாவதாக செய்த சிலையைச் சிதம்பரத்தில் இருக்கும் கோயிலில் வைத்து வழிபாடுகளைச் செய்தான்.
காணாமல் போன சிலை
சிற்பி, தான் முதலில் உருவாக்கிய செப்புச்சிலையினை மன்னன் அனுப்பிய வீரர்கள் உதவியுடன் தென்பகுதிக்குக் கொண்டு சென்றான். அவன் திருநெல்வேலிக்கு அருகில் நெருங்கிய போது, அந்தச் சிலையைச் சுமந்து வந்த படைவீரர்கள் சிலையின் எடை அதிகரிப்பது போல் தெரிகிறது என்றனர். சிற்பி அவர்களிடம் அந்தச் சிலையை அங்கு இறக்கி வைத்துவிட்டு அவர்களை ஓய்வெடுக்கச் சொன்னார். ஓய்வெடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் தூங்கிப் போனார்கள்.
அவர்கள் எழுந்து பார்த்த போது, அங்கிருந்த சிலையைக் காணவில்லை. அதனால் அச்சமடைந்த அவர்கள், அப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் ராமபாண்டியன் என்பவனைச் சந்தித்துத் தாங்கள் கொண்டு வந்த நடராசர் செப்புச் சிலை காணாமல் போன விவரத்தைத் தெரிவிக்கச் சென்றார்கள்.
மன்னன் ராமபாண்டியன் தினமும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டுக் காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தான். முதல் நாளில் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த ஓடிய வெள்ளத்தால் அவனால் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்ல முடியாமல் போனது. அன்று முழுவதும் பட்டினியாக இருந்த அவன் கனவில் தோன்றிய இறைவன், அவனுக்கு மறுநாள் காலையில் நல்லதொரு செய்தி வந்து சேரும் என்று சொல்லியிருந்தார்.
சிற்பியும், அவருடன் வந்த வீரர்களும் மன்னன் ராமபாண்டியனைச் சந்தித்துத் தாங்கள் கொண்டு வந்த நடராசர் செப்புச்சிலை காணாமல் போன விவரத்தைச் சொன்னார்கள். நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தனக்கு, தனது ஆட்சிப் பகுதியில் வேற்று நாட்டிலிருந்து கொண்டு வந்த நடராசர் சிலை காணாமல் போய்விட்டது என்கிற செய்தியை நினைத்து அதிர்ச்சியடைந்தான்.
செப்பறை
![](http://www.muthukamalam.com/images/picture1/chepparainatarajar.jpg)
மன்னன் தனது படைவீரர்களுடன் அவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றான். அப்போது, அருகிலிருந்த காட்டுக்குள் இருந்து சிலம்பொலிச் சத்தம் கேட்டது. அவன், தனது படைவீரர்களுடன் காட்டுக்குள் சென்று பார்த்தான். அங்கு ஓரிடத்திலிருந்து எறும்புகள் வரிசை வரிசையாகக் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்தான்.
அந்த எறும்புகள் சென்ற வழியில் போய்ப் பார்த்த மன்னன் அங்கிருந்த சுயம்புலிங்கத்தையும், அருகில் நடராசர் செப்புச்சிலை இருப்பதையும் கண்டு வியந்து போனான். அவன் இரண்டையும் வணங்கி நின்ற போது, “மன்னனே, இந்த இடத்தில் எனக்குக் கோயிலமைத்து வழிபாடு செய்” என்று இறைவனின் குரல் அவனுக்குள் கேட்டது.
அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் கோயிலமைக்கப்பட்டது. நடராசருக்குத் தனிச்சன்னதியும் அமைக்கப்பட்டது. சிற்பியால் செய்யப்பட்ட முதல் செப்புச்சிலை அமைந்திருக்கும் இந்த ஊர் செப்பறை என்றழைக்கப்படுகிறது. திருநெல்வேலி சந்திப்புப் பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கில் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராஜவல்லிபுரம் சென்று, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் செப்பறைக்குச் செல்லலாம்.
இரண்டு செப்புச்சிலைகள்
மன்னன் ராமபாண்டியன் தான் வழிபடும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும், அந்தச் செப்புச்சிலையைப் போன்றே மற்றொரு சிலையைச் செய்து வைத்திட நினைத்தான். இந்நிலையில் அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசனான வீரபாண்டியன் என்பவன் செப்பறையில் அமைக்கப்பட்ட கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டான்.
அக்கோயிலில் அமைக்கப்பட்டிருந்த நடராசர் தோற்றத்திலான செப்புச்சிலை அவனை மிகவும் கவர்ந்ததால், தனது ஆளுகையிலிருக்கும் கட்டாரிமங்கலம் எனும் ஊரிலும் அதைப் போன்றதொரு நடராசர் சிலையைச் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பினான்.
அதற்காக மன்னன் ராமபாண்டியனைச் சந்தித்து, அந்தச் சிற்பியிடம் சொல்லித் தனக்கும் ஒரு செப்புச்சிலையைச் செய்து தரும்படி வேண்டினான். மன்னன் ராமபாண்டியன் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்றும், சிற்றரசன் வீரபாண்டியனின் வேண்டுகோளுக்கேற்ப கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் என இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து தரும்படி சிற்பியிடம் சொன்னான்.
அதன் பின்னர் சிற்பியும், நடராசர் தோற்றத்திலான இரண்டு செப்புச்சிலைகளைச் செய்து முடித்தார். தனக்குரிய செப்புச்சிலையினை எடுத்துச் செல்லத் தனது படைவீரர்களுடன் அங்கு வந்த சிற்றரசன் வீரபாண்டியன் இரண்டு செப்புச்சிலைகளும் அழகாக இருந்ததைக் கண்டு மயங்கினான். அந்த இரண்டு சிலைகளையும் தானே எடுத்துச் சென்று விட வேண்டுமென்று நினைத்தான். இது போன்ற செப்புச்சிலையை இனிமேல் அந்தச்சிற்பி வேறு யாருக்கும் செய்து கொடுக்கக்கூடாது என்றும் நினைத்தான்.
கட்டாரிமங்கலம்
உடனே அவன், சிற்பியின் கைகளைத் துண்டித்து எடுத்து விட்டு, இரண்டு சிலைகளையும் தனது படைவீரர்களை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். அவனின் படைவீரர்கள் இரு சிலைகளையும் எடுத்துக் கொண்டு, இரு பிரிவாகப் பிரிந்து சென்றனர். ஒரு பிரிவினர் ஒரு சிலையைக் கட்டாரி மங்கலத்துக்குக் கொண்டு சென்று விட்டனர்.
மற்றொரு பிரிவினர் சிலையை எடுத்துக் கொண்டு சென்ற போது, இடையில் குறுக்கிட்ட தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டனர். தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த அவர்கள், அந்தச் சிலையை அப்படியே ஆற்றில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
கட்டாரி மங்கலத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மூன்றாவது செப்புச்சிலையைச் சிற்றரசன் வீரபாண்டியன் அங்கு கட்டி வைத்திருந்த கோயிலில் நிறுவினான். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேய்க்குளம் எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கட்டாரிமங்கலம் செல்லலாம்.
கரிசூழ்ந்தமங்கலம்
![](http://www.muthukamalam.com/images/picture1/karisulnthamangalamnatarajar.jpg)
சில நாட்களுக்குப் பின்பு, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்ததும், நடராசர் தோற்றத்திலான செப்புச்சிலையைப் பார்த்த அந்த ஊர் மக்கள், ஆற்றிலிருந்து அந்தச் சிலையினை எடுத்து வந்து ஊரின் மேடாக இருந்த ஒரு இடத்தில் வைத்து வழிபடத் தொடங்கினர்.
சிற்றரசன் வீரபாண்டியன் சிற்பியின் கையை வெட்டிவிட்டு, இரு சிலைகளையும் எடுத்துச் சென்றதை அறிந்த மன்னன் ராமபாண்டியன், சிற்றரசன் வீரபாண்டியனுடன் போரிட்டு, அவனது இரு கைகளையும் துண்டித்து அனுப்பினான்.
அதன் பிறகு, தாமிரபரணி ஆற்றின் கரையில் எடுத்து வைக்கப்பட்டிருந்த நடராசர் செப்புச்சிலையைத் திருநெல்வேலிக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ஆனால், அது முடியவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், கரிய மேகங்கள் சூழ்ந்த அந்த இடத்திலேயே தான் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு ஒரு கோயில் கட்டித்தரும்படியும் சொன்னார்.
அதன்படி மன்னன் ராமபாண்டியனும் அந்த இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டிக் கொடுத்தான். சிற்பியால் செய்யப்பட்ட நான்காவது செப்புச்சிலை இருக்கும் கோயில் கரிசூழ்ந்தமங்கலம் எனும் ஊரில் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியிலிருக்கும் பத்தமடை எனும் ஊருக்குச் சென்று, அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஊருக்குச் செல்லலாம்.
கருவேலங்குளம்
![](http://www.muthukamalam.com/images/picture1/karuvelankulamnatarajar.jpg)
அதன் பிறகு, மன்னன் ராமபாண்டியன் அந்தச் சிற்பிக்கு மரக்கை ஒன்றைத் தயாரித்துப் பொருத்தினான். மரக்கை பொருத்தப்பட்ட பின்பு, அந்தச் சிற்பி மரக் கைகளின் உதவியுடன் ஒரு நடராசர் செப்புச்சிலை ஒன்றைத் தனது உதவியாளர்களுடன் சேர்ந்து செய்யத் தொடங்கினார். அந்தச் செப்புச்சிலை, இதற்கு முன்பு செய்யப்பட்ட நான்கு செப்புச்சிலைகளையும் விட மிகவும் அழகாக இருந்தது.
அந்தச் செப்புச்சிலையின் அழகில் மயங்கிய அந்தச் சிற்பி, அந்தச் சிலையின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளினார். அவர் கிள்ளிய வடு அந்தச் சிலையின் கன்னத்தில் அப்படியே பதிந்து விட்டது. கிள்ளிய வடுவுடன் கூடிய அந்தச் சிலை கருவேலங்குளம் எனும் ஊரிலிருக்கும் கோயிலில் நிறுவப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் சேரன்மகாதேவி வழியாகக் களக்காடு செல்லும் பாதையில் சென்று கருவேலங்குளம் செல்லலாம்.
சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாய முத்து செய்த நடராசர் தோற்றத்திலான ஐந்து செப்புச்சிலைகள் சிதம்பரம், செப்பறை, கட்டாரிமங்கலம், கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம் எனும் ஐந்து ஊர்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோயில்களில் அவரின் சிற்பத்திறனை வெளிப்படுத்தியபடி அவரது புகழை இன்றும் நிலைத்திருக்கச் செய்து கொண்டிருக்கின்றன.
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.