சிவாலயங்களில் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது? என்று சில விதிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
செய்யத்தக்கன
1. நீராடித் தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து உருத்திராக்கமும் பூண்டு செல்ல வேண்டும்.
2. மலர், தேங்காய், பழம், கற்பூரம், விளக்குகளுக்கு எண்ணெய் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
3. கோபுரத்தைக் கண்டவுடன் இருகை கூப்பி வணங்க வேண்டும்.
4. ஐந்தெழுத்தை மனதில் உச்சரித்தபடி செல்ல வேண்டும்.
5. தல விநாயகரைத் தரிசித்துக் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்டு உட்செல்ல வேண்டும்.
6. பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.
7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிய பின்பு, சுற்றிலுமுள்ள மூர்த்திகளையும் வணங்க வேண்டும்.
8. சண்டேசுவரரை மெதுவாக இருகையால் மும்முறை தட்டி வணங்க வேண்டும்.
9. திருநீற்றை இரு கைகளாலும் பணிவுடன் பெற்றுக் கொண்டு, கீழே சிந்தாது பக்தியுடன் அணிந்து கொள்ள வேண்டும்.
10. ஆலயப்பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.
11. அந்தந்த சந்நிதி முன், திருவுருவங்களுக்கேற்பத் திருமுறைப் பாடல்களையும், துதிப்பாடல்களையும் வாயாரப் பாடிப் பரவ வேண்டும்.
12. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும். (கோயிலின் உள்ளே எச்சந்நிதியின் முன்பும் விழுந்து வணங்கக் கூடாது)
13. கொடி மரத்தின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லிச் செபிக்க வேண்டும்.
14. பின் அங்கிருந்து சிவ சிந்தனையுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்.
செய்யத்தகாதவை
1. தூய்மையின்றி செல்லக் கூடாது.
2. ஆலயத்தினுள் மிதியடியுடன் செல்லக் கூடாது.
3. சமயச் சின்னங்களின்றிச் செல்லக் கூடாது.
4. வீண் பேச்சு பேசக்கூடாது.
5. சண்டையிடக் கூடாது.
6. பக்தர்கள் கூட்டத்தில் இடித்து நெருக்குதல் கூடாது.
7. எச்சில் துப்பக் கூடாது.
8. இறைவனுக்குச் சாத்தப்பட்ட மலர், வில்வம், திருநீறு ஆகியவற்றை மிதிக்கக் கூடாது.
9. கோயில் விக்கிரகங்களைத் தொடக் கூடாது.
10. பலிபீடம், நந்தி இவற்றின் குறுக்கேச் செல்லக் கூடாது.
11. சண்டேசுவரர் சந்நிதியில் நூல போடக் கூடாது.
12. மேலும் தகாது எனக் கருதும் எதையும் செய்யக் கூடாது.