மானுடப்பிறவி பெற்றவர்கள், இப்பிறவியில் புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு மேலான பயனாக வீடு பேறடைய முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து, தீய செயல்களில் ஈடுபட்டுத் துன்பம் தருகின்ற இழிபிறவிகளில் பிறந்து இறப்பதனைத் தொடர்ந்து பெற்று விடக் கூடாது. அவ்வாறு வீடுபேறடைய நம் முன்னோர்கள் மேற்கொண்ட நான்கு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் அந்நான்கு வழிமுறைகளை நாற்படிகள் என்கின்றனர்.
சரியை
சிவபெருமான் உருவத்தை வழிபடுதல், பூந்தோட்டம் உண்டாக்குதல், மலர் பறித்தல், மாலை தொடுத்தல், பெருமானுக்குச் சூட்டுதல், திருக்கோயிலைத் தூய்மை செய்தல், மெழுகுதல், திருவிளக்கிடுதல், பெருமான் புகழைப் போற்றிப் பாடுதல், திருக்கோயில் கட்டல், பழைய கோயில்களைப் புதுப்பித்தல், குளம் தோண்டுதல், மூர்த்தி, தலம், தீர்த்தம் போற்றி வழிபடல், இறைப்பணி, திருக்கோயில் பணி, சிவனடியார் பணியினை ஆர்வமுடன் செய்தல். இவையனைத்தும் புறத்தொழில்கள்.
கிரியை
எண்ணத்தாலும், செயலாலும் இறைவனின் இலிங்கம், தீபம் போன்ற அருவுருவத் திருமேனியை வழிபடுதல், சரியையில் சொல்லப்பட்ட தொண்டுகளைச் செய்தல், சிவபெருமானின் மண், தீ, நீர், வாயு, வெளி, சந்திரன், சூரியன், ஆன்மா ஆகிய அஷ்ட மூர்த்திகளாக எங்கும் நிறைந்து காணப்படுகிறார். அவரை வழிபட முதலில் ஆன்மா தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் பூசை செய்யும் இடத்தைத் தூய்மை செய்ய வேண்டும். அப்பால், பூசைக்குப் பயன்படும் பொருள்களையும் தூய்மை செய்ய வேண்டும். அதன் பிறகு வழிபடு கடவுளாய் இலிங்கத்தைத் திருமுழுக்காட்டுதல் முதலிய செயல்களால் வழிபட்டுச் சுத்தி செய்ய வேண்டும். இவற்றிற்குப் பஞ்ச சுத்தி (ஆன்ம சுத்தி, தானசுத்தி, திரவிய சுத்தி, மந்திர சுத்தி, இலிங்க சுத்தி) என்று பெயர். பின் அர்ச்சனை செய்தல், நறும்புகை காட்டுதல், ஒளிகாட்டி வழிபடல், ஓமம் செய்து வழிபடல் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். இவையனைத்தும் அகத்தும் புறத்தும் வழிபடும் முறைகள்
யோகம்
சரியையாளன் காற்பங்கு மேல்நிலையடைகிறான். கிரியையாளன் அரைப்பங்கு நன்னிலையடைகிறான். யோகநெறி நிற்போன் மனத்தை உலகியலில் உழலாமல் அடக்க வேண்டும். தியானப் பொருளாய சிவத்தையே மனத்தில் நிறுத்திப் பிராணயாமம் முதலிய யோகப்படி முறைகளில் ஈடுபட்டு முன்னேறி மூலாதாரத்திலிருந்து எழும் இடைகலைப் பிங்கலை நாடிகளைச் சுழுமுனையில் நிறுத்தி அதன் வழியாகப் பிரமந்திரம் வரை அமிர்தம் தேக்கெடுக்குப் பின் அவ்வமிர்தை உண்டு இன்பமார்ந்திருக்கை. இது அகத்து மட்டும் இறைவனை வழிபடும் முறையாம்.
ஞானம்
சரியை, கிரியை, யோகம் என்பன அரும்பு மலர் காய் போன்றது. ஞானம் கனி போன்றது. ஞானமே வீட்டுநெறியைக் காட்ட வல்லது. யோக நெறியில் மனத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவன் பெருமானைப் பற்றிய அறிவை ஐயந்திரிவு அறப் பெறுகின்றான். முழு மலவலி கெட பெருமானே குருவாய் ஞானவானுக்கு வந்து உபதேசித்து அருள் மயமாக்குகின்றான். இருவிளையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் முதலிய நிலைகள் ஏற்பட்டு வீடு பெறும் நிலை ஏற்படுகிறது.
இந்நாற்படிகளையும் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சரியை |
கிரியை |
யோகம் |
ஞானம் |
தாசமார்க்கம் |
சத்புத்திர மார்க்கம் |
சகமார்க்கம் |
சன்மார்க்கம் |
அடிமை நெறி |
மகன்மை நெறி |
தோழமை நெறி |
குரு சீட நெறி |
அரும்பு |
மலர் |
காய் |
கனி |
சாலோகமுத்தி |
சாமீபமுத்தி |
சாரூபமுத்தி |
சாயுச்சியமுத்தி |
அப்பர் |
சம்பந்தர் |
சுந்தரர் |
மாணிக்கவாசகர் |
புறத்தொழில் |
அகமும் புறமும் தொழிற்படல் |
அகம் தொழிற்படல் |
அறிவு தொழிற்படல் |