பிள்ளையார் யானைத் தலையும் மனித உடலும் கொண்டுள்ளார். யானைத் தலையுடைய தெய்வ வடிவத்திற்குப் பௌராணிக ரீதியான விளக்கம் உண்டு. அதுபோலவே தத்துவ ரீதியான விளக்கமும் உண்டு.
அம்பிகையின் சரீரத்தில் அவளது இயல்பான தெய்விக மணத்திற்கு மணம் கூட்டும் மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப் பொடி முதலியவற்றைத் தானே தன் சரீரத்திலிருந்து வழித்துப் பிசைந்து ஒரு வடிவம் தந்து அதற்கு உயிரூட்ட கணபதி ஆவிர்பாவம் ஆனதாக புராணம் கூறுகிறது.
கஜமுகாசுரனை அழிக்க அம்பிகை படைத்த உருவம் இது. அம்பிகையின் திவ்ய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப்பிள்ளையாரை உருவாக்கியதால்தான் இன்றைக்கும் எந்த சுப நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூசை செய்கிறோம்.
தேவகணங்கள், மனித வர்க்கம், விலங்கினம், பூதகணங்கள் என அனைத்துக் கணங்களுக்கும் நாயகனாக இந்த தெய்வம் விளங்குவதைக் குறிக்கவே, கழுத்துக்கு மேலே விலங்காகிய யானை முகம்; கழுத்துக்குக் கீழே குழந்தை வடிவிலான மனித உரு; பானை வயிறும் குறுகிய கால்களும் பூத கணங்களைப் போன்று அமைந்துள்ளன. தேவவர்க்கத்தைக் குறிக்க நான்கு கரங்கள்; ஐந்தாவது கரம் தும்பிக்கை. தேவர்களுள் முதல் பூசை பெறும் தெய்வமாக இவர் இருக்கிறார். யானை முகம் தத்துவரீதியாக ப்ரணவ ஸ்வரூபம் என்பர். ப்ரணவ வடிவம் அமைந்துள்ளதை நோக்குகையில், யானையின் காது, தலை, துதிக்கை ஆகிய மூன்றும் சேர்ந்தது போல் தோன்றும். எனவே பிள்ளையார் ஓங்கார மூர்த்தி என்பதை உணர வேண்டும்.
யானைக்குப் புத்திக் கூர்மை, ஞாபக சக்தி எல்லாம் மிக அதிகம்; பிள்ளையார் அறிவே வடிவானவர். வலப்பக்கத்தில் தந்தம் இல்லாமலும் இடப்பக்க வாயோரம் தந்தத்தோடும் காட்சி தந்து, தந்தையின் அர்த்த நாரீச்வரத் தத்துவத்தை நமக்குப் புகட்டுகிறார். ஆண் யானைக்கு தந்தம் உண்டு, பெண் யானைக்கு தந்தம் இல்லை. எனவே பாதி ஆண் யானையாகவும் பாதி பெண் யானையாகவும் முகத்தளவில் காட்டுகிறார் கணநாதர்.
அவனது பேழை வயிறு அண்ட சராசரங்கள் அனைத்தும் அவனுள் அடக்கம் என்பதைக் குறிக்கிறது. கச்சையாக அவர் அணிந்துள்ள பாம்பு, சக்தியின் சின்னம். விநாயகரின் ஐந்து திருக்கரங்களில் மேலே உள்ள வலக்கரம் அங்குசத்தைத் தாங்கியுள்ளது. யானை முகக் கடவுள் ஜீவர்களை நல்ல வழியில் நடத்துகிறார்; அதற்கு அறிகுறியாக இருப்பது இந்த அங்குசம். மேலே உள்ள இடக்கரத்தில் பாசம் உள்ளது. கணேசர் தீவினையாளர்களை அவன் பாசத்தைக் கொண்டு கட்டி அடக்குகிறார்.
கீழே உள்ள வலக்கரம் ஒடித்த ஒற்றைத் தந்தத்தையும், இடக்கரம் மோதகத்தையும் தாங்கி உள்ளன. ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அருள் புரிதல் முதலான ஐந்து தொழில்களையும் குறிக்கின்றன.