பஞ்ச பூதத் திருத்தலங்கள்
ச. பர்வதா
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் உலகைப் படைத்தான்; உள்ளம் மகிழ்ந்தான்; உலகே அவன் ஆனான். மண் படைத்தான்; நீர் படைத்தான்; காற்று மண்டலத்தைப் படைத்தான்; தீயைப் படைத்தான்; வானும் படைத்தான்; உலகில் உயிரும் படைத்தான். காலையே போன்று இலங்கும் மேனியும், கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறும், மாலையின் தாங்குருவே போலும் சடைக்கற்றையும் உடைய சிவனே, புல்லாகிப், பூடாய்ப், புழுவாய், மரமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக், கல்லாய், மனிதராகிப் பின் உயிரே அவன் ஆனான்; உடலாகி, உள்ளமும் ஆனான்; உண்மையும் இன்மையும் அவனே ஆனான்.
தன்னின்று தான் படைத்த மனிதனே தன்னை வணங்கும் பெற்றிமையும் பெற்றான். எல்லாமாய் இலங்கும் கடவுளின் தன்மையை, மனிதன் உணர ஒரு வாய்ப்பாக அமைவதே கோயில். கோயில்கள் பலப் பல. ஒவ்வொரு கோயில்களும் ஏதேனும் ஒரு நோக்கத்துடன், அமைப்புடன் எழுப்பப்பட்டுள்ளன. அவை தனக்கென்று ஒருசில சிறப்புகளைக் கொண்டிருக்கும். அவற்றுள் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் முதலான ஐம்பெரும் பூதங்களையும் படைத்தவன், தானே அவையாகி நின்று அருள் புரியும் தலங்களும் உள்ளன. இப்போது நாம் அவற்றைத் தரிசிக்கச் செல்லலாம் வாருங்கள்.
பிருதிவித் தலம் - காஞ்சிபுரம்
பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகப் போற்றப்படுவது காஞ்சி மாநகரம். பிருதிவி என்பதற்கு மண் என்று பொருள்.
சிவ பெருமானின் துணைவியாராகிய உமாதேவியார், உலகம் உய்வு பெற வேண்டி, ஆகம விதிப்படி ஈஸ்வரனைப் பூஜிப்பதற்காகக், கைலாயத்திலிருந்து காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி மாநகரை வளம் செய்யும் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மண்ணிலே சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். அச்சமயம் கம்பாநதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அஞ்சிய உமாதேவியார் லிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டார். அதனால் இறைவனின் திருமேனி குழைந்தது. அதனால் இறைவனுக்குத் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயர் உண்டாயிற்று. அம்பாள் ஏலவார் குழலி அம்மை எனப்பட்டார்.
கம்பா நதிக் கரையில் ஏகாந்த நிலையில் இத்திருவிளையாடல் நடைபெற்றதால் பரமன் ஏகாம்பர நாதர் எனப்பட்டார். இக்கோயிலின் தல விருட்சமாக மாமரம் விளங்குகிறது. பிருதிவி என்பதற்கு மண் என்பது பொருள். இக்கோயிலில் மண்ணால் அமைந்த லிங்கத்திருமேனிஉருவில் இறைவன் அருளாட்சி செய்வதால், இத்தலம் பிருதிவித் தலமாகப் போற்றப்படுகின்றது.
திருவொற்றியூர் எல்லையைக் கடந்தவுடன் இரு கண்களின் பார்வையையும் இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் இடதுகண் பார்வையைப் பெற்ற தலம் இது. ‘நகரேஷு காஞ்சி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் பெருமையை உடைய இத்தலம் முத்தித் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
“உன்னினும் முத்தி வழங்கு காஞ்சியைப்போல்
உலகில்வே றொரு நகருளதோ”
என்பார் கந்த புராண ஆசிரியர்.
“அவ்வூர்தன்னை அண்ணினுங் கேட்பினும் சொலினும்
வணங்கினும்பே ரின்பவீ டெவர்க்கும் நல்குமே”
என்று காஞ்சிப் புராணம் கூறுகிறது.
அப்புத் தலம் - திருவானைக்கா
பஞ்சபூதத் தலங்களில் அப்பு ஸ்தலம் என்று கூறப்படுவது இத்தலம். அப்பு என்றால் நீர். கோயில் கர்ப்பக்கிருகத்தில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும்.
“செழுநீர்த் திரளைச் சென்றாடினானே”
என்று தேவாரம் கூறுகிறது. வெள்ளை நாவல் மரத்தடியில் அகிலாண்ட நாயகி, காவிரி நதியில் நாதனைக் கண்டு பரவசம் கொண்டு ஆராதித்த தலம். பரமன் ஜம்புகேஸ்வரன் எனப் போற்றப்படுகிறான்.
“ஆனைக் காரருள் புரிதலின் ஆனைக்கா
ஆயிற்று” (திரு. புராணம்)
வெள்ளையானை வழிபட்ட தலமாதலால் ஆனைக்கா என்று பெயர்பெற்றது. சிலந்தியும் முத்தி பெற்ற தலம்.
சோழமன்னன் ஒருவன் காவிரியில் குளித்தபோது அவன் அணிந்திருந்த பதக்கம் நதியில் விழுந்துவிட, அவன் சிவபெருமானிடம் “நீரே கொண்டருளும்” என வேண்டினான். அது திருமஞ்சனக் குடத்தில் அகப்பட்டு, அபிஷேகத்தின் போது இறைவன் மீது விழ, அதனை ஆடல்வல்லான் அணிந்து, அரசனுக்கு அருள்புரிந்த தலம் இது. மேலும் ஆற்றில் மிதந்து வந்த நாவற்பழத்தைச் சம்புமுனிவர் உண்ண, அது அவர் வயிற்றில் முளைத்து, கபாலத்தைக் கிழித்து, மரமாக வளர, அதன் சுமை தாங்காது, அவர் சிவனை வேண்டினார். ஈசனும் அவரை அங்கிருக்கச் செய்து, அம்மர நிழலில் தாமும் வீற்றிருப்பதாக ஐதீகம்.
வாயு தலம் - திருக்காளத்தி
வாயு ஸ்தலமாகப் போற்றப்படுவது திருக்காளத்தி. சந்நிதானத்தில் எரியும் தீபங்களில் ஒன்று, காற்றினால் மோதப்பட்டது போல் எப்போதும் அசைந்து கொண்டே இருக்கிறது. ஸ்ரீ காளஹஸ்தி என்பது, ஸ்ரீ - சிலந்தி ; காளம் - பாம்பு ; ஹஸ்தி - யானை - மூன்றும் பூசித்து முத்தி பெற்ற தலம்.
இம் மலைகிழவோனை அன்புடன் வழிபட்டு தன் கண்ணை இடந்து அப்பி, அருந்தொண்டு செய்த கண்ணப்பர் ஆறே நாளில் அமரலோகம் அடைந்தார்.
“வேயனைய தோளுடையோர் பாகமது வாகவிடை ஏறி சடைமேற்
தூயமதி முடிசுடு காடில்நட மாடிமலை தன்னை வினவில்
வாய்க்கலச மாகவழி பாடுசெயும் வேடன்மல் ராகு நயனங்
காய்கணையி னாலிடந் தீசனடி கூடுகா ளத்தி மலையே”
என்று திண்ணனார், கண்ணப்பர் ஆன செய்தி திருவிளையாடற்புராணத்தில் இடம் பெறுகின்றது.
தேயு தலம் - திருவண்ணாமலை
பஞ்சபூதத் தலங்களில் தேயுதலம் என்று போற்றப்படுவது திருவண்ணாமலை. தேயு என்பது அழித்தலுக்குக் காரணமாகிய அக்கினியைக் குறிக்கும். இது சோதிவடிவில் நிலை பெற்று, நினைக்கவே முத்திதரும் நிர்மலமான தலமாகும். எம்பிரான் சோதிமயமானவன். தீயவை அனைத்தையும் நீறாக்கித் தன்மயமாக்கிக் கொள்ளும் பேராற்றல் படைத்த நெருப்பின் வடிவம்; நானே பரம்பொருள் என்று வாதிட்ட பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் முன் சிவபெருமான் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், அக்கினிமலையாய்த் தோன்றி நின்றார். பிரமன் அன்னப்பறவையாய் ஆகாசம் நோக்கிச் சென்று முடி தேட, விஷ்ணுவோ பன்றி உருவெடுத்து பூமியைப் பிளந்து, அடி தேடினார். அழல் வடிவில் நின்று அவர்தம் அகந்தை தீர்த்து, தாமே பரம்பொருள் என்று நிலைநாட்டிய தலம் திருவண்ணாமலை.
“செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்குமலர்ப் பாதம்”
என்று திருவாசகமும்,
“கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்”
என்று திருவிளையாடற்புராணமும் இந்நிகழ்வைப் போற்றுகின்றது.
உலகின் அக்ஞான இருள் நீக்கி, ஞானச் சுடராய் நிற்கும் அருணாசலேசுவரர் கார்த்திகை தீபத் திருநாளில் இன்றும் சோதிமயமாய் திருவண்ணாமலையில் தரிசனம் தருகின்றார். மகிழ மரத்தடியில் பார்வதி தேவி உண்ணாமல் தவம் செய்து இடப்பாகம் பெற்றது இத்தலத்திலே தான்.
“ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ
ஓடிபோம் நமதுள்ள வினைகளே”
ஆகாயத் தலம் - சிதம்பரம்
பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாகப் போற்றப்படுவது சிதம்பரம். “பூலோக கைலாயம்” எனப்படும் இப் புண்ணிய பூமியைத் தரிசித்தாலே நமக்கு முத்தி கிட்டும். ‘கோயில்’ என்னும் சிறப்புப் பெயராலும் இத்தலம் குறிக்கப்படும். பஞ்ச சபைகளில் கனகசபையாகிய இப்பொன்னம்பலத்திலே எந்நேரமும் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டு இருக்கின்றார். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று நிலைகளில் இங்கு பரமனைக் காணலாம்.
ஆத்ம ஜோதியாய் மறைந்து நிற்கும் இறைவன் பொன்னாலான வில்வ மாலை அணிந்து, ஆகாயமாய்ப் பரந்து விரிந்த நிலையில், அருவமாகக் காட்சி தருகின்றான். எல்லாமாகி நிலைத்து நிற்கும் இறைவனின் நிலையைச் சொல்லாமல் சொல்லி நிற்கும் இக்காட்சியே சிதம்பர ரகசியம்.
“அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோவிப் பிறவியே”
சிதம்பரத்தைத் தரிசித்தால் மட்டுமின்றி நினைத்தாலே முத்தி கிட்டும். பிறப்பினின்றும் விடுபடலாம்.
முடிவுரை
இவ்வாறு காணும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திலங்கும் ஈசன் நாம் உண்ணும் உணவாய், பருகும் நீராய், உணரும் உணர்வாய் ஒளிர்கின்றான். தென்னாட்டில் பல்வேறு தலங்கள் இருந்த போதும் ஐம்பெரும் பூத வடிவில் திகழ்ந்து, இறை உண்மையை உணர்த்தும் இத்தலங்களைத் தரிசிக்க நாம் என்ன பேறு பெற்றோம்!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.