சிவபெருமானின் 64 திருவுருவங்களில் அற்புதமான ஆடலரசனுக்கு நடைபெறும் திருமஞ்சனமே ஆனித்திருமஞ்சனத் திருநாளாகும். ஆனித் திருமஞ்சனம் சிவனுக்கு உரியதானாலும் நடராஜருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நடராஜர் உள்ள எல்லா சிவாலாயங்களிலும் ஆனித்திருமஞ்சனம் நடைபெற்றாலும் சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பானதாகும். திருமஞ்சனம் என்றால் மகா அபிஷேகம் என்று பொருள். நடராஜரும் சிவகாமியும் தங்களது தாண்டவக் கோலத்தைப் பக்தர்களுக்குக் காட்டி அருள்கின்றனர்.
மனிதர்களின் வாழ்வில் ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என ஆறு பொழுதுகள் இருக்கின்றது. இதில் தேவர்களின் வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகும். அந்த மாதத்தில்தான் ஆருத்ரா தரிசன அபிஷேகம் நடைபெறும். அதே போல் மாசி மாதமானது தேவர்களுக்கு காலைப் பொழுதாகும். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் இறைவனுக்கு காலை அபிஷேகம் நடைபெறும். உச்சிகால பொழுதானது தேவர்களுக்கு சித்திரை மாதத்தில் வரும். அந்த மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம், உச்சிகால அபிஷேகமாக நடத்தப்படும். ஆனி மாதம் தேவர்களுக்கு மாலைப் பொழுது என்பதால், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் இறைவனுக்கு மாலை நேர அபிஷேகம் செய்யப்படுகிறது. இதுவே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. இதே போல் ஆவணி மாதம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். புரட்டாசி மாதம் அர்த்தஜாம வேளையாகும். எனவே ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசி திதியில், இறைவனுக்கு இரவு நேர அபிஷேகமும், புரட்டாசி மாதம் பூர்வபட்ச சதுர்த்தசி திதியில் அர்த்தஜாம வேளை அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆறு அபிஷேகங்களையும் குறிக்கும் விதமாகத்தான், கோவில்களில் தினமும் இறைவனுக்கு ஆறுகால பூஜைகள் நடத்தப்படுகின்றன. சில சிவன் கோவில்களில் மட்டுமே ஆறுகால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிதம்பரம் ஆலயத்தில் ஆண்டுக்கு ஆறுமுறை நடைபெறும் இந்தச் சிறப்பு அபிஷேகங்களில், மார்கழி மாத திருவாதிரை அபிஷேகமும், அடுத்ததாக ஆனிமாதத் திருமஞ்சன அபிஷேகமும் சிறப்பு மிக்கதாக உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனிமாத உத்திரத்தன்று நடைபெறும் அபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். தமிழ்நாட்டைப் போல இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம், ஈழத்துச் சிதம்பரம், திருக்கோணேஸ்வரம் ஆகிய சிவன் தலங்களிலும் ஆனி உத்திர விழா சிறப்பாக நடைபெறுகின்றன.
புனிதமும், மகத்துவமும் நிறந்த இந்த நாளில், விரதமிருந்து சிவன் கோவிலுக்குச் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபடுவது வாழ்வைச் சிறப்பாக்க வழி வகுக்கும். கல்விக்கு அதிபதியாகிய புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகளான மிதுனம், கன்னி இரண்டும் உள்ள ஆனிமாதத்தில் நடக்கும் ஆனித்திருமஞ்சனத்தைக் காணும் பேறு பெற்றவர்கள் இறையருளால் அறிவில் சிறந்து விளங்குவர். அன்றையதினம் அதிகாலையில் எழுந்து நீராடி, விரதமிருந்து இறைவனைத் தரிசனம் செய்ய வேண்டும். இறைவனை வேண்டி நோன்பு இருப்பது மேலும் சிறப்புகளை வழங்கும். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தபடியே இறைவனை வணங்கி, அவரது புகழ்பாடும் பாடல்களைப் பாடி வழிபடலாம்.