இந்து சமயத் தெய்வங்களில் ஒருவரான அனுமனுக்குப் பல இடங்களில் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதே போல் வைணவக் கோயில்களிலும் இவருக்கென்று தனிச் சன்னதிகளும், உருவச் சிலைகளும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். இராமாயணத்தில் முக்கிய இடம் பிடித்த அனுமனுக்கு அந்தப் பெயர் எப்படி ஏற்பட்டது என்று தெரியுமா?
சமஸ்கிருதத்தில் ‘ஹனு’ என்றால் ‘தாடை’ என்றும், ‘மன்’ என்றால் ‘பெரியது’ என்றும் பொருள். அதாவது, ‘ஹனுமன்’ என்றால் ‘பெரிய தாடையை உடையவன்’ என்று சொல்கின்றனர். இன்னொரு வழக்கில் ‘ஹன்’ என்பதற்கு ‘கொன்றவன்’ என்றும், ‘மானம்’ எனபதற்கு ‘தற்பெருமை’ என்றும், ‘ஹன்மான்’ என்பதற்கு ‘தற்பெருமையைக் கொன்றவன்’ என்றும் பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது. ஆண் மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் சொல்லப்பட்டு, அதிலிருந்துதான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் சிலர் சொல்கின்றனர். இது எதுவுமில்லை, அஞ்சனை மகன் என்பதே அனுமன் என்று மருவிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.