இந்து சமயத் திருமணங்களில் சொல்லப்படும் கீழ்க்காணும் மந்திரத்துக்குச் சிலர் தவறான நோக்கத்தில், தவறான பொருளைச் சொல்லித் திசை திருப்புகின்றனர்.
ஆனால், இந்த மந்திரத்தின் உண்மையான பொருள் என்ன என்று தெரியுமா?
“சோமஹ் பிரதமொ விவிதே
காந்தர்வீ விவித உத்தராக்
திர்தியோ அக்னிஸ்டெபதிஹ்
துரியஸ்தேமனுஷ்யாஷா
சோமோ ததாட் கந்தர்வயா
காந்தர்வோ ததாதக்னா யே
ராயின்காப்புத்ரம்ஸ்காதத்
அக்னிர்மக்யாமதோ இமாம்”
(ரிக்வேதம் 10.85, 40.41)
ஆங்கிலத்தில்:
“Somah prathamo vivide
Gandharvo vivida uttarah
Trtiyo Agnistepatih
Turiyastemanusyajah.
Somo dadad gandharvaya
Gandharvo dadadagna; ye
Rayincapputramscadad
Agnirmahyamatho imam”
(Rigveda, 10. 85, 40. 41)
இப்பாடலின் பொருள்:
"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்
பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்
மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்
நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"
இதன் உட்பொருள்:
1. ஒரு பெண் குழந்தை பிறந்து தானாக ஆடைகளை அணியும் பருவம் (4 - 5 வயது) வரை சந்திர ஒளியின் மென்மை, குளிர்மையை ஒத்த குணங்களை பெற்று வளர்கிறது. ஆகவே இப்பருவம் சந்திரனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பருவம் எனப்படுகிறது.
2. கந்தர்வன் என்பது இசைக்கும், கேளிக்கைக்கும் அழகியலுக்கும் அதிபதியாக சொல்லப்படும் தேவதை. ஒரு பெண் குழந்தையின் 5 - 11 வயது காலம் என்பது குறும்பும், அழகும் நிரம்பி வழிய, கள்ளம் கபடம் இல்லாமல் துள்ளித்திரியும் காலம். ஆகவே இது கந்தர்வனின் ஆதிக்கத்தில் (பாதுகாவலில்) இருக்கும் பருவம் எனப்படுகிறது.
3. அதன் பின் 11 - 16 வயது பருவ காலம், உடலில் ஹார்மோன்களின் மாற்றத்தால் உடலமைப்பு மெல்ல மாற உஷ்ண அழுத்த மாற்றங்கள் ஏற்பட்டு பூப்படையும் பருவம். காமவெப்பம் மெல்ல உடலில் தொற்றிக்கொள்ளும் மங்கைப் பருவம். ஆகவே இது அக்னி (வெப்பம்) யின் ஆதிக்கத்தின் கீழ் வரும் பருவம் எனப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு தேவதைகளின் அருளால் பெண்மைக்குரிய அம்சங்களை எல்லாம் பெற்று, மங்கையாய் அமர்ந்திருக்கும் உனக்குக் குறைவிலா நலமே தர இப்போது மானிடன் நான் உன் பாதுகாவலன் ஆகிறேன். இது தான் இந்த வேதமந்திரத்தின் உட்பொருள்.