இந்து சமயம் குறிப்பிடும் பல்வேறு தானங்களில் பஞ்சலாங்கல தானம், மாகட தானம், இரண்டய அச்வதானம், இரண்ய இடபதானம், இரண்யகற்பதானம், இரண்ய கன்னிகாதானம், இரத்தினம் - மணி, இரத்தினதேனு தானம், இலக்குமி தானம், உபயமுகி தானம், கற்பகக்கொடி தானம், கற்பகத்தரு தானம், கோகர்ணம், விஷ்ணு விம்பதானம், திலதேனு தானம், திலபத்ம தானம், விச்வநேமி தானம், சத்தசாகரத்தானம் ஆகிய தானங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பஞ்சலாங்கல தானம்
சந்தன மரத்தாலேனும், தேக்காலேனும், ஐந்து கலப்பைகள் செய்து கொம்பைப் பொன்னாலும், குளம்பை வௌ்ளியாலும் அலங்கரித்துள்ள எருதுகள் பத்துப் பூட்டி ஓமஞ் செய்து பத்து வேதியரைப் பூசித்து ஒரு சிற்றூராயினும், பேரூராயினும் பிராமணருக்குக் கொடுத்துக் கலப்பையைத் தானஞ் செய்வதாம்.
மாகட தானம்
ஒரு சாணிற்குக் குறையாது அதிகம் நுாறு சாணாய் ஒரு பொற்குடம் செய்வித்து வயிரத்தால் அலங்கரித்து நெய், பால், குடத்தில் விட்டு ஒரு கற்பகத்தரு செய்து அமைத்து அடியில் திரிமூர்த்திகள், கணபதி, வேதம், புராணம் இவர்களை எழுந்தருளச் செய்து கும்பத்தைச் சூழத் தானியாதிகள் பரப்பித் தான் சுகிர்பூசிதனாய்க் கும்பத்தை வலம் வந்து வேதியர்க்குக்குக் கடத்தைத் தானம் செய்வதாம்.
இரண்டய அச்வ தானம்
1008 அல்லது 108 கழஞ்சு பொன்னால் ஒரு குதிரை செய்வித்து வௌ்ளியினால் முகமுங், காலும் அமைத்து அலங்கரித்து வேதம் நன்றாக அறிந்த வேதியனை அழைத்து அவனை இந்திரனாகப் பாவித்து 5 கழஞ்சு பொன், தட்சணை வைத்து வேதியர்க்கு உணவு அளித்தலாம். இதைச் செய்தவர் சுவர்க்காதிகளை அடைவர்.
இரண்ய இடபதானம்
முகமும், கொம்பும் வௌ்ளியாலும் வால் கழுத்து முசிப்பு இவைகளுக்குப் பதுமராகம், கோமேதகம், முத்து இவைகளைப் பதிப்பித்து, பொன்னால் இடபம் உருவஞ் செய்வித்து படிகத்தாற் பிறை செய்து கழுத்திலணிந்து முத்துகளாற் பலவணிகள் செய்திட்டுக் கிழக்கு நோக்க வைத்து வேதியர்க்குத் தட்சணையுடன் அளித்து அமுது செய்வித்தலாம். இவை செய்தவர் சுவர்க்காதி போகம் அடைவர்.
இரண்யகற்பதானம்
பொன்னினால் மனிதன் புகத்தக்க ஒரு இடம் விதிப்படி செய்வித்து யாக வேதியகையிலிருத்திப் பூசித்து அதில் யஜமானன் புகுந்து கிழக்காய் இருக்குங் காலையில் கருப்பாதானம், சீமந்தம் முதலியன செய்து வலப்பால் அறுகும், அத்திப்பழத்தையும் பிழிந்து, பின் ஆண் (புருடன்) குடத்தினின்று எழுந்த பின்பு சாதகர்ம முதலியன செய்வித்து வேதியர்க்கு முதல் அளித்து, முப்பது கழஞ்சியிற் பெண்ணுருச் செய்வித்து ஆலயத்திற்கு அதைத் தானஞ் செய்து குடத்தையும் மற்றுள்ள அதிக பொருட்களையும் வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.
இரண்ய கன்னிகாதானம்
ஒரு பிராமணக் கன்னிகையைத் தந்தையிடம் விலைக்கு வாங்கி, அவளைப் பொன்னாலும், ஆடையாலும் அணிந்து பிரமச்சாரிக்குத் தீ முன்னர்ப் பாணிக்கிரகணஞ் செய்வித்துப் பூமி முதலிய தானஞ் செய்து வேதியரை அருத்துவதாம்.
இரத்தினம் - மணி. இரத்தினதேனு தானம்
வேதிகை செய்வித்து அதில் வௌ்ளுப்புப் பரப்பி அதில் கன்றினுடன் பசு எழுதி மூக்கில் நூறு புட்பராகம், முகத்தில் 81 பதுமராகம், நெற்றியில் முத்து, பொற்பட்டம், கண்களில் நூறு முத்துக்கள், கழுத்தில் நூறு கோமேதகம், முதுகில் நூறு நீலம், இரண்டு பக்கங்களில் நூறு சீவரத்னங்கள், பற்களுக்குப் பளிங்கு, வாலில் நூறு முத்துக்கள், அரையில் நூறு மாணிக்கம், பொன்னாற் குளம்பு, மூக்கில் சூர்ய சந்திரகாந்திகற்கள், வௌ்ளியால் நாபி, சந்தனம், குங்குமம், கற்பபூரம் முதலியவைகளால் உரோம கூபங்கள் செய்வித்துக் கருடப்பச்சை தன்னாற் கால்கள் அமைத்து, சந்திகளின் நவமணிகள் பதித்து, கற்கண்டிற் கோமயம் அமைத்து நெய்யைக் கோசலமாக வைத்து, கன்றும் இவ்வாறமைத்து, காலில் கவடி கட்டி, இடங்கள் தோறும் நெல் முதலிய குவித்து வேதிகையிற் பூசை செய்வித்து வேதியர்க்கு அருத்தித் தட்சணையுடன் தானஞ் செய்வதாம். (ஸ்ரீ இலங்கபுராணம்.)
இலக்குமி தானம்
ஆயிரம் முதல் நூறு கழஞ்சு இறுதியான பொன்னில் இலட்சுமியின் உருச்செய்து விதிப்படி பூசித்துத் தட்சிணையுடன் வேதியர்க்குத் தானஞ் செய்வது.
உபயமுகி தானம்
ஆவீனும் போது கன்று சிரசு உதயமான பின் அப்பசுவைத் தானம் பண்ணல்.
கற்பகக்கொடி தானம்
குறைந்தது ஐந்து பலத்தில் இரண்டு கற்பகக் கொடிகள் செய்வித்துப் பத்துப் பலம் பொன்னாற் கின்னர மிதுனம் இருத்தி வேதிகையில் கொடியை வைத்துப் பிராமி அநந்த சத்தியைப் பூசித்துப் பிராமணர்க்கு அன்னதானம் செய்வித்துக் கொடியைப் பிராமணர்க்குத் தானஞ் செய்வது.
கற்பகத்தரு தானம்
பொன்னாற் செய்த எட்டுச் சாகைகளை உடைய கற்பகத்தருவின் அடியில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து அதைச் சுற்றி பிரமன் முதலிய தேவரையும் தாபித்து தருவைச் சிவாலயத்திற்கேனும், வேதியர்க்கேனும் தானஞ் செய்வது.
கோகர்ணம்
1. கோகர்ண தேசத்திலிருக்கும் சிவஷேத்திரம், இதில் திருக்கைலையிலிருந்து சிவலிங்கம் பெற்று இலங்கை நோக்கிச் செல்லும் இராவணன், தேவர் வஞ்சனையால் சிவலிங்கத்தைப் பிரமச்சாரிய உருக்கொண்டு வந்த விநாயகரிடம் கொடுத்து நீரின் பொருட்டு நீங்க விநாயகர் சிவலிங்கத்தைப் பூமியில் எழுந்தருளச் செய்தனர். இராவணன் தன் காரியம் முடித்து வந்து சிவலிங்கத்தைப் பெயர்க்க அது பசுவின் காது போல் குழைந்தது. ஆதலால் இப்பெயர் பெற்றது. இது கேரள தேசத்தில் இருப்பது.
2. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் நாற்றிசையிலும் முப்பது கோலளவு அளக்கப்பட்ட பூமி. காளையுடனும் கன்றுகளுடனும் கூடின நூறு கோக்கள் சுகமாகத் தங்குமிடம். இவ்வளவு பூமிதானம் செய்தவன் புண்ய லோகம் அடைவான். (பார - அச்.)
விஷ்ணு விம்பதானம்
ஆயிரம் கழஞ்சு பொன்னால் விஷ்ணு விம்பம் செய்வித்து வேதியர்க்கு அளித்தலாம்.
திலதேனு தானம்
10 கழஞ்சு பொன் தாமரை மலர் ஒன்று செய்வித்து வேதிகையில் வைத்து வௌ்ளை ஆடையால் சுற்றி மலர்ந்த எள்ளின் பூப்போல் பொன்னினால் செய்வித்து, அதன் மேல் வைத்து அதன் மீது சிவபூசை செய்து பொற்கமலத்தின் வட பால் பதினொரு வேதியரை இருத்தி அவர் முன் 11 வஸ்திரம் விரித்து எள்ளினாற் பசு செய்து அதன் கொம்பு 1 கழஞ்சு பொன்னிலும், குளம்பு 2 கழஞ்சு வௌ்ளியிலும், கவசம் வெண்கலத்தாலும் செய்வித்துப் பதினொரு இடத்துந் தனித்தனி இருத்தி உருத்திர மந்திரத்தால் பூசித்துக் கீழ்ப்பால் துவாதசாதித்தரையும், அக்நி திக்கில் வேதியரையும் வித்தியேசுவரரை அட்ட மூர்த்திகளாகப் பூசித்து ஐந்து கழஞ்சு பொன் தட்சணையுடன் பசுவை வேதியர்க்குத் தானஞ் செய்தலாம்.
திலபத்ம தானம்
திலம் - எள். மெழுகிட்ட பூமியில் வௌ்ளை வஸ்திரம் விரித்து மூன்று கலம் எள் பரப்பி அதன் மேல் பத்துக் கழஞ்சு பொன்னால் எட்டிதழ்க் கமலம் செய்து மூன்று கழஞ்சியில் உமையுஞ் செய்து இருத்திச் சிவமூர்த்தியுடன் விதிப்படி வித்தியேசுரரையும் பூசித்துத் தட்சணையுடன் வேதியர்க்கு அளிப்பது.
விச்வநேமி தானம்
இருபத்தெட்டுப் பலத்திற்கு குறையாத பொன்னினாற் பதினாறு கோணமுள்ள சக்கரஞ் செய்வித்து நடுவில் எட்டுத் தளமுள்ள தாமரை செய்வித்து அதன் அடையில் அஷ்ட கன்னியருடன் கண்ணனை எழுந்தருளச் செய்து கிழக்கில் விஷ்ணுவையும், மற்ற திக்குகளில் அத்திரி, வசிட்டன், பிருகு, காசிபன் முதலியோரையும் பிரதிட்டித்து, இரண்டாம் ஆவரணத்தில் நட்சத்திரங்களையும், மூன்றில் சப்தமாதர். அட்ட வசுக்கள் முதலியவரையும், நான்கில் வேதங்களையும், ஐந்தில் பஞ்ச பூதங்களையும் பதினொரு உருத்திரர்களையும், ஆறில் அட்டகசங்கள், திக்குப்பாலகரையும், ஏழில் வாள், கதை, சூலம், சத்தி, வில், குடை, சங்கம், முத்து, சாமரம், சாந்தம், கோரோசனை முதலியவற்றையும், எட்டில் மீண்டும் இரண்டிற் கூறியவற்றையும் செய்வித்து, எருதின் தோலில் எள் பரப்பி விதிப்படி பூசித்து மறையவர்க்கு அன்ன முதலிய அளித்துத் தானஞ் செய்வித்தலாம்.
சத்த சாகரத்தானம்
குறைந்தது ஏழு பலம் பொன் தகட்டில் ஏழு குழிகள் செய்வித்து ஒவ்வொரு குழிகளிலும் உப்பு, நெய், பால், தயிர், கன்னல், மது, நீர், இவைகளை நிரப்பி முறையே உப்பு முதலியவைகளில் பிரமன், மால், மகேசன், சூரியன், சத்தி, இந்திரன், திரு, மலைமகள் முதலியவர்களைத் தாபித்து ஏழு குண்டத்தினும் ஏழு சாதி மணிகள் இட்டு எருதின் தோளில் எள் பரப்பிப் பூசித்து வேதியர்க் கூட்டித் தானஞ் செய்வது.
இவ்விதம் தானங்கள் பல்வேறு நிலைகளில் செய்யப்பெறுகின்றன. நாமும் நம்மால் முடிந்த தானங்களைச் செய்த உரிய பலனைப் பெறுவோம்.