சைவசமயத்தில் இடம் பெற்றிருக்கும் பன்னிரு திருமுறைகளில், ஒன்று முதல் பதினொன்று திருமுறைகள் வரை தொகுக்கப்பட்ட காலம் பதினொன்றாம் நூற்றாண்டு. இவற்றினைத் தொகுத்தருளியவர் திருநாரையூரில் தோன்றிய 'நம்பி ஆண்டார் நம்பி' எனும் அருளாளர். அதன் பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் காலத்தில் 'பெரிய புராணம்' என்று குறிக்கப்பெறும் 'திருத்தொண்டர் புராணம்' பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. இப்பன்னிருதிருமுறைகளையும் பாடியருளியோர் மொத்தம் 27 அருளாளர்கள்.
முதல் மூன்று திருமுறைகள் (தேவாரம்) - திருஞானசம்பந்தர் பாடி அருளியவை.
நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகள் (தேவாரம்) - திருநாவுக்கரசர் (அப்பர்) பாடி அருளியவை.
ஏழாம் திருமுறை (தேவாரம்) - சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளியவை.
எட்டாம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்) - மாணிக்கவாசகர் பாடி அருளியவை.
ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு) - இத்திருமுறையை அருளிச் செய்தவர்கள் மொத்தம் ஒன்பது ஆசிரியர்கள்.
1. திருமாளிகைத் தேவர்
2. சேந்தனார்
3. கருவூர்த்தேவர்
4. பூந்துருத்தி நம்பி
5. கண்டராதித்தர்
6. வேணாட்டடிகள்
7. திருவாலியமுதனார்
8. புருடோத்தம நம்பி
9. சேதிராயர்
இவற்றுள் திருப்பல்லாண்டினைப் பாடியருளியவர் சேந்தனார் மட்டுமே. 'திருவிசைப்பா' எனும் தொகுப்பினைச் சேந்தனார் உட்பட ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்கள் அனைவருமே பாடியருளியுள்ளனர்.
பத்தாம் திருமுறை (திருமந்திரம்) - திருமூலர் அருளிச் செய்தவை.
பதினொன்றாம் திருமுறை (பொதுப் பாடல்களின் தொகுப்பு) - இத்திருமுறையை பாடி அருளியவர்கள் மொத்தம் பன்னிரண்டு ஆசிரியர்கள்.
1. திருஆலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள்
5. நக்கீரத்தேவர்
6. கல்லாடத்தேவர்
7. கபிலத்தேவர்
8. பரணத்தேவர்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிரா அடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பிகள்
பன்னிரண்டாம் திருமுறை (பெரிய புராணம்) - சேக்கிழார் பெருமான் அருளிச் செய்தவை.