பசுவின் சானத்தை எரிப்பதன் மூலம் கிடைக்கும் வெண்சாம்பலிலிருந்து விபூதி (திருநீறு) தயாரிக்கப்படுகிறது. இந்தப் பூமியில் பிறக்கும் எந்த ஒரு மனிதரும் இறுதியில் எரிந்து சாம்பலாக வேண்டியது தான் என்பதை எப்பொழுதும் நமது சிந்தனையில் இருத்தி வைப்பதன் மூலம், அதுவரை நல்ல எண்ணங்களோடும், நற்சிந்தனைகளோடும் நல்ல செயல்களைச் செய்து வாழ வேண்டும் என்கிற நல்ல மனோவியல் வழியிலான நடவடிக்கையில் இந்த விபூதி பூசும் பழக்கம் வைக்கப்பட்டிருக்கிறது.
அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் இறப்பு உறுதியானது. இறப்பிற்குப் பின்பு இந்த உடலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு விடும். கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை உணர்ந்து, வாழும் காலத்தில் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்ப வழிகாட்டும் வகையில் விபூதி இருக்கிறது. இதே போல் வைஷ்ணவர்கள் விபூதிக்குப் பதில் திருமண் இட்டுக்கொள்ளும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது, இந்த மண்ணிலே பிறந்த நாம், இந்த மண்ணிலேதான் மடியப்போகிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டு நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று திருமண் இடுகிறார்கள்.
விபூதிக்கு மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், நெருப்பில் இடப்படும் பொருள்கள் யாவும் கருகிப்போகின்றன. அதன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிறது. அதுவே இந்த பூமியில் உள்ள எல்லாப்பொருட்களுக்கும் இறுதி நிலை, மாறாத நிலையாகும். எல்லாம் அழிந்த பின்னும், அழியாத சத்தியமாக நிற்கக் கூடிய நிரந்தரமான உருக்கொண்டவன் இறைவன் என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்து அவனை நினைக்க வேண்டும் என்பதாகும். மெய்யான ஆத்மாவுக்கு அடையாளமாகவே இதைப் பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த உடல் பொய்யானது என்பதையும் நிரந்தரமான அமைதி எதுவோ அதுதான் உண்மை என்பதும் நம்மை அறியாமலே நம் மனதில் பதியவும் இந்த விபூதி பூசும் வழக்கம் உதவுகிறது.
"விறகுக் கட்டையை அக்னி சாம்பலாக்குவது போல, அக்னி எல்லாக் கருமங்களையும் சாம்பலாகுகிறது" என்பது கீதையில் கூறப்பட்டுள்ளது. அதாவது நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நம்மால் செய்யப்படும் நன்மை தீமை போன்ற எல்லா காரியங்களையுமே 'கர்மா' என்றழைக்கிறோம். நமது செய்கைகளினால் நமக்கு ஏற்படும் நல்விளைவு அல்லது தீய விளைவு, அதாவது, நல்ல காரியங்கள் செய்வதால் ஏற்படும் விளைவு, நல்ல விளைவு எனவும், நாம் செய்த தீய காரியங்களால் ஏற்படும் விளைவு, தீய விளைவுகள் எனவும் குறிப்பிடுகிறோம். இவையே கர்ம வினைகளாகும். இந்த விளைவுகளில் நல்ல விளைவு அதிகமாக இருந்தால் நாம் புண்ணியம் செய்திருக்கிறோம் என்றும், தீயவிளைவுகள் அதிகம் இருந்தால் நாம் பாவம் செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறோம். இவ்வாறான கர்மாக்களை அக்னி எரித்து விடும் என்பதும், அவ்வாறு எரித்த பின் எஞ்சி நிற்பது ஞானம் தான் என்பதையும் அறிவுறுத்தும் வகையில் இந்த விபூதி கண்ணால் பார்க்கக்கூடிய அடையாளமாக உள்ளது.