கலியுகத்தில் கண்கண்ட தெய்வங்களாகப் போற்றப்படுபவர்களில் கண்ணனுக்குச் சிறப்பிடம் உண்டு. தசாவதாரங்களில் இராமனாக மனித உருவினை எடுத்து, மனிதகுலம் அனுபவிக்கும் துன்பங்களை அனுபவித்தவர். கிருஷ்ணாவதாரத்தில் கௌரவர்களால் பாஞ்சாலிக்கு தீங்கேற்பட்ட போது ஓடி வந்து மானம் காத்தவர். மகாபாரதப்போரில் கௌரவர் படை தோற்று அழியவும் பாண்டவர்கள் வெல்லவும் காரணமாக இருந்தவர். சிறுகுழந்தையாக இருந்த போது, தன்னைக் கொல்ல வந்த அரக்கியான பூதகியை அழித்தவர். ஆயிரம் கைகளைக் கொண்டு ஆணவத்தோடு பிறருக்குத் தீங்கு செய்த வாணாசுரனின் செருக்கை அடக்கியவர். இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட கண்ணன் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஓர் எதிரியைச் சந்திக்க ஆற்றலின்றி ஆயுதம் இல்லாமல் ஓடியதாக சாத்தகி என்னும் பாண்டவர் படையைச் சேர்ந்த வீரன் பாண்டவர்களிடம் தெரிவித்ததாக வில்லிபுத்தூரார் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ளது.
பிரகத்திரதன் என்பவன் மகததேசத்து மன்னாகவும் தேவர்களுக்குப் பகைவனாகவும் செயல்பட்டான். பிள்ளைப்பேறு இல்லாத குறையால் காட்டிற்குச் சென்று சண்ட கௌசிக மாமுனிவரை வணங்கி வரம் வேண்டினான். முனிவரும் அருள்பாலித்துத் தன் வசிப்பிடத்திலிருந்த மாமரமொன்றின் கனியினைக் கொடுத்தார். மன்னன் அக்கனியை காசிதேசத்து மன்னனின் பெண்களாகிய தன் மனைவியர் இருவருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இருவரும் கருவுற்றனர். மன்னன் தனக்குப் பிள்ளைகள் பிறக்கப் போகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தான். பிரசவகாலத்தில் முழுக்குழந்தையாகக் கிடைக்காமல் இருபெண்களுக்கும் பாதிப்பாதி பிள்ளை பிறந்தது. அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த மன்னன் தன் வீரர்களிடம் கூறி ஊருக்கு வெளியே எறிந்து விடக் கட்டளையிட்டான்.
இரவில் ஊருக்கு வெளியே கிராம தேவதையாக ஊர்வலம் வரும் ஜரை என்பவள் பாதிப்பாதியாகக் கிடந்த பிள்ளையைப் பொருத்தி, உயிர்ப்பித்து மன்னனுக்குக் கொடுத்தாள். தன் பெயரில் பிள்ளைக்குப் பெயர் வைக்கும்படி ஜரை கூற, மகிழ்ந்த மன்னன் ஜராசந்தன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். ஜராசந்தன் போர்க்கலைகள் பயின்று போர்களில் பலரைக் கொன்று, வென்று கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு வந்தான். தன்னுடைய இரண்டு பெண்களான அஸ்தி, பிராஸ்தி என்போரைக் கண்ணனின் மாமன் கம்சனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான்.
கண்ணனுக்கும் கம்சனுக்கும் இடையே இருந்த பகையில் கம்சன் கொல்லப்பட்டான். தன் மருமகனைக் கொன்ற கண்ணனை அழிக்க ஜராசந்தன் தன்னுடைய பெரும்படைகளோடு வந்து மதுராபுரியைச் சுற்றி வளைத்தான். பலராமன், கண்ணன் உள்ளிட்ட யாதவர் படைகளால் ஜராசந்தன் தோற்று ஓடினான். இருப்பினும் மீண்டும் மீண்டும் பதினெட்டு முறை போர் நடத்தித் தோற்றான். எவ்வாறேனும் கண்ணனை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் ஜராசந்தனை விட்டு நீங்கவில்லை. இச்சூழலில் மிகுந்த பலம் கொண்டு விளங்கிய யவன நாட்டின் அரசன் காலயவனன் என்பவன் தன்னிடம் போரிடுவதற்குத் தகுதி கொண்டவர்கள் கண்ணனும் பலராமனும் என்பதை நாரதமுனிவர் மூலம் அறிந்து மதுராபுரிக்குப் போர் செய்யப் பெரும்படையைத் திரட்டி வந்தான். இதனையறிந்த ஜராசந்தன், காலயவனனுடன் இணைந்தான்.
காலயவனனால் யாதவர் படைக்கு அழிவேற்படும் என்பதுணர்ந்த கண்ணன், சமுத்திரராசனை அழைத்து, பகைவர் உள்ளே புகமுடியாதபடி பாதுகாப்புள்ள இடத்தில் தம் படையைச் சேர்ப்பித்தான். காலயவனன் வருகையில், கண்ணன் ஓராயுதமும் இல்லாமல் மதுராபுரியிலிருந்து ஓடினான்.
கண்ணன் இவ்வாறு செயல்பட்டதற்குக் காரணம் உண்டு. ஜராசந்தன் வீமனால் கொல்லப்பட வேண்டும் என்னும் ஊழ்வினை உண்டு. இக்காரணத்தினை அறிந்ததால்தான் கண்ணன் பதினெட்டு முறை நடைபெற்ற போரில் ஜராசந்தனைக் கொல்லவில்லை. மேலும் மனித உருவில் கண்ணனின் வாழ்வு அமைந்ததால் மனிதத்தன்மையை அனுசரித்து இவ்விதம் நடந்தது. மேலும் கண்ணனின் செய்கையைப் பாண்டவர் படையைச் சார்ந்த புத்திசாலியான சாத்தகி பாண்டவர்களிடம் கூறியதற்குக் காரணம் உண்டு. பாண்டவர்களில் தருமன் கௌரவர்களிடம் போர் வேண்டாம் எனக் கருதியிருந்தான். இவ்வாறு கண்ணனை இகழ்ந்தாலாவது போராவேசம் கொண்டு பாண்டவர்கள் செயல்படுவர் எனச் சாத்தகி நினைத்து இவ்வாறு பேசினான்.