எல்லாம் வல்ல, உள்ள, பொருள். அண்டத்தின் மூலக் காரணமே பரப்பிரம்மம் தான். ஆகாசம், வாயு, அக்னி, ப்ருத்வி, நீர் எல்லாமே இதிலிருந்து வந்தவையே என்கிறது அக்னி புராணம். பரப்பிரம்மத்தைக் "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என்பர். பரப்பிரம்மம் காலம், அண்டங்களை கடந்தது. ஸத் (உண்மை), சித் (அறிவு), ஆனந்தம் ஆகிய மூன்றுமே பரப்பிரம்மத்தின் தன்மைகள் என்று ரிக் வேதம் கூறுகிறது.
அஸ்திதித்வம் (Non Existence), ஸ்திதித்வம் இரண்டும் தொடக்க நிலையில் கிடையாது. பரப்பிரம்மமே முதலில் இருந்தது. இதன் இரண்டு பிரிவுகளாகப் பரப்ரம்மன், அபரப்ரம்மன் ஆகியவை இருக்கின்றன. முதலாவதான பரப்ரம்மன் (அம்ருத) உருவமற்றது, இரண்டாவதான அபரப்ரம்மன் (ம்ருத) உருவம் உடையது. இரண்டாவதான அபரப்ரம்மன் உலகமாக இருக்கிறது. முதலாவதான பரபிப்ரம்மன் பார்க்க முடியாதது, வர்ணிக்க முடியாதது, எண்ண முடியாதது, புரியாதது எனப் பல்வேறு உபநிடத நூல்கள் கூறுகின்றன.
இறைவன் படைக்கும் முன்பாக இந்தப் பிரபஞ்சம் பெயர், உருவம் இல்லாமல், சுத்த வெளியாய், நிர்க்குணமாய்ச் சின்மாத்திரப் பரப்பிரம்மமாக இருந்தது. மாயாசக்தி தத்துவக் குணத்தை முதன்மையாக விளக்கும். அதில் பரப்பிரம்மம் பிரதிபலிப்பதனால் தோன்றிய பிரதி பிம்பமே ஈசுவரன் எனப்படுகிறது. இந்த ஈசுவரன் அந்த மாயையை வசப்படுத்திக் கொண்டு, பிரம்மா, விஷ்ணு, உருத்திர வடிவங்களாக நின்று உலகங்கள் அனைத்தையும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில்களையும் செய்து வருகிறான்.
மாயையினால் உண்டான பிரபஞ்சமும், மாயா சரீரமும் தோன்றி மறைந்து ஜீவன்களை மீண்டும் பிறப்பு இறப்புகளைக் கொண்டு வரும். முடிவில் எந்தப் பரப்பிரம்மத்திலிருந்து தோன்றியதோ, அந்தப் பரப்பிரம்மத்திலேயே ஒன்றாகக் கலந்துவிடும் என்று சித்தர் தத்துவம் தெரிவிக்கிறது.