அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்தப் பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும். முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது. அதனால் நாம் நிலை பெற்றோம்.
ஓம் என்ற சொல் ஆண் பாலும் இல்லை, பெண் பாலும் இல்லை, மூன்றாம் பாலினமும் இல்லை. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்குக் கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. மேலும் ஓம் ‘அவ்’ என்ற தாதுவில் - வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது. ‘அவ்’ என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் – பாதுகாவலன் என்று பொருள். மேலும், இது “அவ்யயம்” ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல். (வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன). எனவே இறைவன் ஒருவனே என்பது தமிழ் இலக்கண வழியிலும் விளக்கப்படுகிறது.