சூரியன், காலச் சுழற்சியில், தென்திசை நோக்கிப் பயணம் செய்யும் காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனமாகவும் வடதிசை நோக்கிப் பயணம் செய்யும் தட்சிணாயனமாகவும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன காலமாகவும் கணக்கிடப்படுகிறது. ஆடிமாதத்தின் முதல் நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவதையும், தை மாதத்தின் முதல்நாளில் சூரியனை வழிபடுவதையும் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகிறோம். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலமானதால் ‘மகர ராசியில் என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் பிரவேசிக்கும் காலம் `சங்கராந்தி’ என அழைக்கப்படுகிறது. மழைக் காலம் தொடங்கும் காலத்துக்கு முன்பாக விதைகளைத் தூவி, தை மாதப் பிறப்புக்கு முன்பாக அறுவடை செய்த நெல்லில் இருந்து பெறப்படும் பச்சரிசியைப் புதுப்பானையில் பொங்கலிட்டு, வயலில் விளைந்த கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பொருள்களைப் படையலிட்டு, குடும்பம் குடும்பமாக சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த நன்றித் திருவிழாவிற்கும் ஒரு கதை இருக்கிறது.
இந்திரனுக்கு மற்றொரு பெயர் போகி என்பதாகும். மழையைப் பொழிய வைக்க இந்திரனை வணங்குவதுண்டு. மழை பொழிய வைக்கும் இந்திரனுக்கு நன்றியாகவே தை முதல்நாள் அறுவடை ஆகும் பயிர்களை படையலாக வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. கிருஷ்ணர் கோகுலத்தில் வளர்ந்து வந்த போது, தை மாதம் இந்திரனுக்கு விழா எடுக்கும் நாள் வந்த போது, கிருஷ்ணர் கோகுலத்து மக்களை இந்த வழிபாட்டை இந்திரனுக்குச் செய்வதை விட, கோவர்த்தனகிரிக்கும், அவற்றைப் படைத்துக் காத்துக் கொண்டிருக்கும் நாராயணனுக்கே செய்யவேண்டும் என்றும், நாராயணனின் தன்மையைக் கொண்ட சூரியநாராயணனுக்கே இந்த வழிபாட்டைச் செய்யுங்கள் என்று புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
அதனால், கோபம் கொண்ட இந்திரன் கோகுலத்திலும், சுற்று வட்டாரத்தில் அதுவரை காணாத அளவுக்குப் பேய் மழையாகப் பொழிய, கோகுலமே நிலை குலைந்தது. கண்ணனோ சற்றும் கலங்காமல் கோவர்த்தனகிரியைக் குடையாய்ப் பிடித்து மக்களைக் காப்பாற்றினார். கோகுலத்தின் ஒரு ஈ, எறும்புக்குக் கூடத் துன்பம் நேராமல் பாதுகாத்தார். தோல்வியடைந்த இந்திரன் நாராயணனைச் சரணடைய அவர் சங்கராந்திக்கு முதல்நாளை இந்திரன் பெயரால் போகிப் பண்டிகை எனக் கொண்டாடுவார்கள் என அவனைச் சமாதானம் செய்தார். காளிங்க மடுவில் குதித்துக் கண்ணன் காளிங்கனை வதம் செய்தபோதும் இந்த மாதிரி ஒரு போகி நாள் என்றும், அன்று கண்ணனுக்குக் காளிங்கனின் விஷம் ஏறாதபடிக்கு ஆயர்பாடிச் சிறுவர்கள் தீ மூட்டி, பறை கொட்டி இரவு முழுதும் தாங்களும் விழித்திருந்து, கண்ணனும் தூங்காமல் விழித்திருக்கும்படிச் செய்தனர் என்றும் அதன் காரணமாகவே போகியன்று பறை கொட்டும் வழக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் கதையைப் போல், கிருஷ்ணரின் மகன் சாம்பன் என்பவன் துர்வாச முனிவர் வந்த போது அவரைக் கேலி பேச, அவர் அவனுக்குத் தீராத தோல் நோய் பீடிக்கச் சாபம் கொடுத்து விட்டார். சாம்பன், அவரிடம் மன்னிப்பு கோரி, முனிவர் கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டினான். அந்தச் சாபத்தைத் திரும்பப் பெற மறுத்த துர்வாசர், அவனைச் சூரியனை வழிபட்டுச் சாப விமோசனம் பெற வழிகாட்டினார். அதனைத் தொடர்ந்து, சாம்பன் சந்திரபாகா நதிக்கரையில் சூரியனை வழிபட்டு, விமோசனம் பெறச் சென்றான். அங்கு, முனிவர்களின் பத்தினிகள், நதிக்கரையில் ஒன்று கூடிச் சூரியபகவானை வேண்டி விரதமிருந்து பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனர். அத்னைக் கண்ட சாம்பனும், அதுபோல் விரதம் இருந்து சூரிய வழிபாடு செய்து, தோல் நோய் நீங்கப் பெற்றான். அந்நாளே மகர சங்கராந்தி என மற்றொரு கதையும் சொல்லப்படுகின்றது.
சூரிய வழிபாடு மகாபாரதக் காலத்திற்கு முன்பே, ராமாயண காலத்திலேயேத் தொடங்கிவிட்டது என்கின்றனர். ராமர், ராவணனை வெல்வதற்காக, அகத்தியரின் அறிவுரைப்படி ஆதித்ய ஹ்ருதயம் படித்து சூரியனுக்காக விரதம் இருந்து, பின்னர் போருக்குப் புறப்பட்டதாக வால்மீகி சொல்கின்றார். சூரியனை வழிபடுவது என்பது தொன்று தொட்டு இருந்து வந்திருக்கும் ஒரு வழிபாடு ஆகும். நம் கண்ணுக்கு அன்றாடம் தெரியும் கடவுள் சூரியனே. தென் திசையில் பயணித்துக் கொண்டிருந்த சூரியன் தன் பயணத்தை வடதிசைக்கு மாற்றும் நாளே உத்தராயன புண்ணியகாலம் என்றழைக்கப் படுகின்றது. இந்த வடதிசைக்கு சூரியன் மாறும், தை மாதம் முதல் தேதியன்று நம் தமிழ்நாட்டில் பொங்கலாகக் கொண்டாடப்படுகின்றது. சூரியன் இல்லையேல் மழையும் இல்லை, மண் வளமும் இல்லை, தட்பமும், வெப்பமும் இணைந்த சூழலில் தான், பயிர், பச்சைகள் செழிப்பாய் வளரவும் முடியும். ஆகவே விஞ்ஞான ரீதியாகவும் சூரிய ஒளி இன்றி எதுவும் செய்ய முடியாதல்லவா? அதற்கான நன்றி நவிலலே பொங்கல் என்றும் சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படும் இந்நாளை மகர சங்கராந்தி என்றும் சொல்கின்றனர். இந்தியா முழுவதும் மகர சங்கராந்தி என்று சொல்லப்படும் இவ்விழாவினை வெவ்வேறு பெயர்களிலும் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாம், மணிப்பூர் போன்ற இடங்களில் "போகாலி பிகு" என்ற பெயரில், இந்நாள் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் "லோகிரி" என்ற பெயரில், சோளப்பொரி, அரிசி போன்றவற்றில் இனிப்புச் சேர்த்து நெருப்பில் இட்டு ஆடிப் பாடிக் கொண்டாடி மகிழ்கின்றனர். குஜராத், மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் "மகர சங்கராந்தி" என்ற பெயரில், எள்ளுடன் சேர்த்த இனிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். காஷ்மீரத்தில் இந்நாளில் பருப்பு, அரிசி, நெய் கலந்த கிச்சடி செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்கின்றனர். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சங்கராந்தி அன்று புண்ணியகால ஸ்நானம் என்னும் வழிபாடு முக்கியமாகக் கருதப்படுகின்றது. அன்றைய நாளில், கங்கை, யமுனை, நர்மதை போன்ற புண்ணிய நதிகளில் நீராடிச் சூரிய வழிபாடு செய்து மகிழ்கின்றனர். இலங்கையில் மார்கழி மாதம் முழுதும் வீட்டில் கோலம் போடும்போது, சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவை மொத்தத்தையும் சேர்த்துப் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையாரை வழிபட்டுப் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடுகின்றனராம். இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர் போன்ற நாடுகளிலும் இந்நாளை வேறு வேறு பெயர்களில் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘மகர சங்கராந்தி’ எனும் பொங்கல் திருநாளை, சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாளை, நாம் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவோம்...!