தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தைப்பூசம் எப்படி விழாவானது? என்பதற்கான கதையைப் பார்போம்...
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமானும், தேவர்களின் முறையீட்டை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய தோற்றமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான ஆறு தீப்பொறிகள் ஆறு அழகான குழந்தைகளாகத் தோற்றம் பெற்றன. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு, பின்னர் ஆறுமுகங்களும் ஒன்றிணைக்கப்பட்டும் முருகப்பெருமானாகத் தோற்றம் கொண்டார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவி, பழனி மலையில் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகப்பெருமானுக்குத் தைப்பூச நாளில்தான் ஞானவேலை வழங்கினார்.
அதன் காரணமாகவே, பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவேதான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது தொன்ம நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு, முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை, தினமும் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்குத் தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருக பக்தர்கள், பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனைத் தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள், முருகப்பெருமானை நினைத்து, தங்களுடைய நோயைக் குணப்படுத்திட வேண்டி, நோய் நீங்கப் பெற்றவுடன், காவடி எடுத்து வந்து நன்றிக் கடன் செலுத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். நோய் நீங்கப் பெற்றவர்கள், முருகப்பெருமானுக்குக் காவடி எடுத்துச் சென்று வணங்கி வழிபட்டுத் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். பெரும்பான்மையாக, முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி எடுத்து நன்றி செலுத்துகின்றனர்.
முருகப்பெருமானுக்குப் பக்தர்கள் காவடி எடுத்து வேண்டுவதற்கும் ஒரு கதை இருக்கிறது.
அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். அகத்தியரின் ஆணைக்கேற்ப இடும்பனும் கயிலை சென்று, அவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். வரும் வழியில், இடும்பன் வழி தெரியாமல் திகைத்தான். அப்போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் அங்கு தோன்றி, இடும்பனை ஆவினன்குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறினார்.
இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது, காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படிக் காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, இரு மலைகளையும் தூக்கிச் செல்ல உதவும்படி வேண்டினான்.
ஆனால், அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.
அதைக் கண்ட அகத்தியர் மற்றும் இடும்பன் மனைவியும் முருகனிடம் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருள் புரிந்ததுடன், இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு வேண்டியதை வழங்குவதாக வாக்களித்தார்.
அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று சொல்கிறார்கள்.