மாதந்தோறும் வரும் முழுநிலவு நாளும் தனிச் சிறப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் விரதம் கடைப்பிடிப்பதன் மூலம், இறைவனின் அருளைப் பெற்று, அதற்கான பலன்களை அடைய முடியும். ஒவ்வொரு மாதமும் வரும் முழுநிலவு நாளில் விரதமிருந்து இறைவனை வழிபடுவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள வாருங்கள்...!
சித்திரை - பாவ, புண்ணியக் கணக்குகளைப் பராமரித்து வரும் சித்ரகுப்தன் தோன்றிய நாள். இந்நாளில் விரதம் இருந்தால் இறப்புக்குப் பின்பு நல்ல நிலை (மோட்சம்) கிடைக்கும்.
வைகாசி - முருகப்பெருமான் தோன்றிய நாள். வைகாசி விசாகம். இந்நாளில் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.
ஆனி - காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா நடைபெறுகிற நாள். இந்நாளில் விரதம் இருந்தால் இறைதரிசனம் கிடைக்கும்.
ஆடி - கஜேந்திரன் நல்ல நிலை அடைந்த நாள். இந்நாளில் விரதமிருந்து, அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைத்து வழிபட்டால், மங்கள வாழ்வு கிடைக்கும்.
ஆவணி - இந்நாளில் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமைப் பலப்படும்.
புரட்டாசி - இந்நாளில் விரதம் இருந்தால் முன்னோர்களின் நல்லாசியைப் பெறலாம்.
ஐப்பசி - அன்னாபிஷேகத் திருநாள். இந்நாளில் விரதம் இருந்தால் வறுமை நீங்கும்.
கார்த்திகை - இந்நாளில் விரதமிருந்து இறை வழிபாடு செய்தால், ஒளிமயமான எதிர்காலம் அமையும்.
மார்கழி - ஆருத்ரா தரிசன நாள். இந்நாளில் விரதமிருந்து, ஆருத்ரா தரிசனம் பார்ப்பவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் அமையும்.
தை - தைப்பூசத் திருநாள். இந்நாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளை முழுமையாகப் பெற்று உயர்வடையலாம்.
மாசி - மாசி மகம் திருநாள். இந்நாளில் விரதம் மேற்கொண்டால் நாடாளும் வாய்ப்பு உண்டாகும்.
பங்குனி - பங்குனி உத்திர நாள். முருகன் – வள்ளி திருமணம், சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்ற நாள். இந்நாளில் வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கித் திருமணம் விரைவில் நடைபெறும்.