குரு பகவான் சிம்ம ராசியில் நுழையும் போது வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமகத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ‘குரு நுழைவு’ நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால், அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டும்.
வாருங்கள் அதற்கான முழுக்கதையைத் தெரிந்து கொள்வோம்...!
ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால், உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. அதனைத் தொடர்ந்து, தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும்படி வேண்டி வழிபட்டனர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும். விடுவிக்கப் பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து, “தான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய நதிகளில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் பாவவினைகள், பிறவிப் பிணிகள் துன்பங்கள் யாவும் நீங்கி, அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். மாசிமகத்தன்று முக்கியத்துவம் கொண்ட புண்ணிய தலங்களில் இருக்கும் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடும் வழக்கம் வந்தது.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவேரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி, மகாநதி முதலான நதிகள் கைலாயம் சென்று சிவபெருமானை வணங்கி மக்களின் பாவங்களை எல்லாம் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். இதனால், எங்களுக்குப் பாவச்சுமை அதிகமாகிறது. அந்தப் பாவச்சுமைகளிலிருந்து எங்களை விடுவிக்க ஏதாவதொரு நல்ல வழியைக் காட்டியருள்ம்படி வேண்டினர். அதனைக் கேட்ட சிவபெருமான், ‘நதிகளே! மாசி மாத மகம் நட்சத்திர நாளில் கும்பக்கோணத்திலிருக்கும் மகாமகத் தீர்த்தத்தில் நீராடினால், தங்களிடம் சேர்ந்திருக்கும் மக்கள் செய்த பாவச்சுமைகள் நீங்கிப் புனிதம் பெறலாம்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி நதிகளும், மகாமகக் குளத்தில் நீராட வருவதாகத் தொன்ம நம்பிக்கை இருக்கிறது.
கும்பகோணம் மகாமகக் குளத்திற்கு அப்படியொரு சிறப்பு எப்படி ஏற்பட்டது ? என்று உங்களுக்குத் தெரியுமா?
உலகம் அழியும் நேரம் வந்த போது, பிரம்மன் தனது படைப்பாற்றல் எல்லாவற்றையும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலையின் உச்சியில் பாதுகாப்பாக வைத்து விட்டார். பிரளயக் காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கும்பம், நீரில் மிதந்து சென்றது. பிரளய நீர் வடிந்த நிலையில், அந்தக் கும்பம் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமேக் கும்பக்கோணம் எனப்படுகிறது. அங்கிருந்த அமுதக் குடத்தை வேடன் வடிவில் வந்த சிவபெருமான், அம்பைச் செலுத்தி உடைத்தார். அப்போது, அதிலிருந்த அமுதம் அனைத்தும் பெருகி மகாமகக் குளமாக வடிவெடுத்தது. அங்கு அமுதத்தில் நனைந்த மணலால், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கிய சிவபெருமான், பின்னர் அந்தச் சிவலிங்கத்தினுள் ஒன்றிணைந்தார். ஆதியில் தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரும், அமுதத்தில் தோன்றியதால் அமுதேஸ்வரர் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டன. அந்த நாள் மாசி மாதம் வரும் மகம் நாள் என்று புராணங்கள் சொல்கின்றன.
கும்பகோணத்திலிருக்கும் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் இருக்கிறது. இக்குளத்தை மேலிருந்து பார்த்தால் குடம் போலக் காட்சியளிக்கும் என்கின்றனர்.
பிற சிறப்புகள்
* இறை வழிபாட்டில் சிறப்பு பெற்றது மாசி மாதமாகும். அம்மாதத்தில், மகம் நட்சத்திரம் மேலும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ‘மகத்தில் பிறந்தார் ஜகத்தை ஆள்வார்’ என்பது ஜோதிட வாக்கு. அனைத்து மாதத்திலும் மகம் நட்சத்திரம் வருகிறது எனினும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திர நாள் மிகவும் சிறப்பு பெற்றது. சிவபெருமானின் சக்தியாகிய பார்வதி தேவி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டித் தவமிருந்த தக்கனின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமானும் அவன் கேட்ட வரத்தை வழங்கினார். அதன் பிறகு, பார்வதிதேவியும் தக்கன் என்பவரின் மகளாகத் தோன்றினார். தக்கன், அந்தக் குழந்தைக்குத் தாட்சாயிணி எனப் பெயரிட்டு, வளர்த்து வந்ததுடன் இறைவன் சிவபெருமானுக்குத் திருமணமும் செய்து வைத்தார். தாட்சாயிணி மாசி மகம் நாளில் பிறந்ததால், அந்நாள் புனிதம் மிகுந்ததாக இருக்கிறது.
* கோடீஸ்வர யோகம் மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக்கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன். கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசிமாத மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனைக் கடலாடும் நாள் என்றும், நீராடும் நாள் என்றும் சொல்கின்றனர்.
* சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள் மாசி மகம் .
* கடலுக்கடியில் இருந்த பூமியைப் பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்த நாள், மாசி மகம் நாள் எனப் புராணங்கள் கூறுகின்றன.