வாழ்வில் வளம் வேண்டித் தெய்வங்களையும், வயதில் மூத்த பெரியவர்களையும் நாம் வணங்குகிறோம். இந்து சமயம், யாரை எப்படி வணங்க வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களைத் தெரிவிக்கிறது. வாருங்கள் அவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
நம் உடலில், தலை, இரண்டு கை, இரண்டு காது, மோவாய், இரண்டு புஜங்கள் ஆகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்க வேண்டும். இதை `அஷ்டாங்க வணக்கம்’ என்கின்றனர். தாய், தந்தை, குரு, தெய்வங்களுக்கு மட்டும் அஷ்டாங்க வணக்கம் செலுத்தலாம்.
அதாவது, பூமியில் தலையை வைத்து, மார்பு பூமியில் படும்படி வலது கையை முன்னும், இடது கையைப் பின்னும் நேரே நீட்ட வேண்டும். பின் அதே முறையில் மடக்கி வலப்புயமும், இடப்புயமும் மண்ணில் படும்படி வயிற்றை நோக்கி நீட்டி, வலது புறக் காதினை முதலிலும், இடதுபுறக் காதினைப் பின்னரும் மண்ணிலே படும்படிச் செய்ய வேண்டும்.
தலை, இரண்டு கை, இரண்டு முழந்தாள் என்ற ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்குவதற்கு `பஞ்சாங்க வணக்கம்’ என்று பெயர்.
ஆண்கள் அஷ்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்ய வேண்டும்.
மற்றவை இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டு வணங்குவதாகும்.
இரு கைகளைக் கூப்பி வணங்கும் முறைகள்
மும்முர்த்திகளை வணங்கும் போது, தலைக்கு மேல் ஒரு அடி தூரம் உயர்த்திக் கும்பிட வேண்டும். பிற கடவுள்கள்களுக்குத் தலையின் மேல் கைகூப்பி வணங்க வேண்டும்.
குருவை வணங்கும்போது நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.
அரசர், அதிகாரி, தந்தை இவர்களை வணங்கும்போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.
அந்தணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.
தாயை வணங்கும் போது வயிற்றில் கைகூப்பி வணங்க வேண்டும்.