ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் சித்திரை மாதம் முதல் நாள் மேசம் (சித்திரை) விசு (விஷு) புண்ணிய காலம் என்றும், ஐப்பசி மாதம் முதல் நாள் துலா விசு (விஷு) புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியன் மேச ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது சித்திரை மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை மேச விசு (உத்தர அயனம்) புண்ணிய காலம் என்று கணக்கிடுகிறார்கள். இது போல சூரியன் துலா ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது ஐப்பசி மாதத்தில் என்பதால் இந்த மாதத்தின் முதல் நாளினை துலா விசு (தட்சிண அயனம்) புண்ணிய காலம் என்று கணக்கிடுகிறார்கள். தமிழ் சோதிடக் கணிதப்படி சித்திரை முதல் நாள் மற்றும் ஐப்பசி முதல் நாள் ஆகிய இரு நாட்களிலும் பகல் மற்றும் இரவுப் பொழுதுகள் சரிசமமாக இருக்கும்.
தமிழ் வருடப் பிறப்பன்று தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ‘விசுக்கனி காணல்' என்ற நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, இரவு சாப்பாடு முடிந்த பிறகு பூஜை அறையைத் தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுகின்றனர். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை தயாரித்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, வழிபாட்டுக்குரிய தெய்வத்தின் முன் வைப்பர். அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர். சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை முதன் முதலாக வீட்டிலிருக்கும் வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்திக் கொள்வார். பின்பு அவர், இறைவன் முன்பு குத்து விளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதன் பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே பூசை செய்யுமிடத்துக்கு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூசைக்குரியத் தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காகப் பூசைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக காணும்படி செய்வார். இவ்வாறு செய்தால், இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.