முருகப்பெருமானுக்குரிய வழிபாடுகளில் “கார்த்திகை விரதம்” முக்கிய இடத்தைப் பெறுகிறது. இந்த விரதம் தோன்றியது எப்படி?
தேவர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்த சூரபத்ம சகோதரர்களை அழித்துத் தங்களைக் காக்க வேண்டுமென்று தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்டி நின்றனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவர்களது துயரத்தை நீக்கும் பொருட்டு, தனது தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் ஆகிய முகங்களுடன் ஆறாவது முகமான அதோமுகம் முதலியவைகளிலிருந்து நெருப்புப் பொறிகளை உருவாக்கினார். அந்நெருப்புப் பொறிகளை அக்னியும், வாயும் கங்கையின் சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தனர். அப்பொறிகளிலிருந்து ஆறு குழந்தைகள் உருவானது. அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் ஆறு பேர் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தனர். அப்போது ஒரு நாள் சிவபெருமானும், பார்வதியும் அக்குழந்தைகளைக் காண அங்கு வந்தனர். பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றிணைத்து ஒரே குழந்தையாக மாற்றினார். அவ்வாறு ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தைகளாக மாறிய நாள் திருக்கார்த்திகை நாள் ஆகும். அந்நாளில் முருகப்பெருமானை வேண்டி வழிபடுபவர்களுக்குச் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்றும், அதற்கென்று குறிப்பிட்ட விரத முறையினைப் பின்பற்ற வேண்டும் என்றும் சிவபெருமான் அருளினார். அம்முறையில்;
* கார்த்திகை நட்சத்திரமானது மாலை ஐந்து மணிக்கு மேல் இருக்கும் நாளே சரியான விரத நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
* திருக்கார்த்திகை தினத்தில் விரதமுறையை மேற்கொள்வோர், கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர நாளன்று நண்பகலில் உணவினை உண்டு, இரவில் உண்ணாமல் விரத வழிபாட்டினைத் தொடங்க வேண்டும்.
* மறுநாள் கார்த்திகையில் நீராடி முருகனை வழிபட்டு அன்று முழுவதும் விரதமிருந்து தியானம், பாராயணம், கோவில் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
* பகலிலும் இரவிலும் உறங்கக் கூடாது. மறுநாள் ரோகிணி அன்று காலையில் நீராடி முருகனை வழிபாடு மேற்கொண்டு உணவு உண்ணலாம்.
* மாதந்தோறும் கார்த்திகை அன்று அதிகாலையில் நீராடி முருகனை வழிபட வேண்டும். பின் பகலில் உறங்காமலும், உணவு உண்ணாமலும் முருகனைப் பற்றி சிந்தனை செய்து தீயசெயல்களில் ஈடுபடாது இருக்க வேண்டும்.
* மாலையில் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம். இவ்விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பாராயணம் செய்யலாம்.
* வழிபாட்டின்போது கந்தரப்பம், பாசிப்பருப்பு பாயாசம், இனிப்புக்கள், பழங்கள் ஆகியவை படைத்து வழிபடலாம். இவ்விரத்தில் பட்டினி இருக்க முடியாதவர்கள் பால், பழம் ஆகியவற்றை உண்ணலாம்.
* மாலை வழிபாட்டிற்குப்பின் விரதமுறை முடிக்கப்பட்டு உணவு உண்ணப்படுகிறது. கார்த்திகை விரதத்தின்போது அன்னதானம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
* ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை, ஆடியில் வரும் ஆடிக்கார்த்திகை, தையில் வரும் தைக்கார்த்திகை ஆகிய மூன்று கார்த்திகை நாட்களில் கடைப்பிடிக்கப்படும் விரதம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பலன்கள்
* கார்த்திகை மாதம் வரும் திருக்கார்த்திகை தினம் முதல் மேற்கொண்டு, மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளிலும் விரதமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி, பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து விரதம் மேற்கொண்டு வழிபட்டால் வாழ்வின் உன்னத நிலையை அடையலாம்.
* கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதமுறையினை மேற்கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு செல்வம், கல்வி, ஆயுள், நல்ல மனைவி, நன்மக்கட் பேறு, நிம்மதியான வாழ்வு ஆகியவை கிடைக்கும்.
நாரதர், அருணகிரிநாதர், அரிச்சந்திரன், திரிசங்கு, பகீரதன் உள்ளிட்டோர் இவ்விரதத்தினைப் பின்பற்றி வழிபாடு செய்து நற்பேறு பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.