ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அமாவாசைக்கு முந்தைய தினமும் சிறப்பானது. அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சவுமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்திராயண காலத்தின் தொடக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் தொடங்கும் தட்சிணாயண காலத்தின் தொடக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கொள்ளும் முக்கியமான நாட்கள். முன்னோர் வழிபாட்டை, ஆடி அமாவாசையன்று, காலையேத் தொடங்கி விட வேண்டும். ஏதாவது ஒரு தீர்த்தங்கரைக்குச் சென்று, தர்ப்பணம் செய்து வர வேண்டும். மதியம் சமையல் முடிந்ததும், மறைந்த முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு, திருவிளக்கேற்ற வேண்டும். ஒரு இலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளைப் படைக்க வேண்டும். படங்களுக்கு தீபாராதனை செய்த பிறகு, காகத்திற்கு உணவிட வேண்டும். இலையில் படைத்த படையலை வீட்டில் மூத்தவர் சாப்பிட வேண்டும். அவர் சாப்பிட்டதும் மற்றவர்கள் சாப்பிடலாம். இவ்வாறு செய்வதால், முன்னோர் மகிழ்ந்து, நம்மை வாழ்த்துவதாக தொன்ம நம்பிக்கை.
மகாபாரதத்தில் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுவதற்கான நிகழ்வு ஒன்று சுட்டிக் காட்டப்படுகிறது.
துரியோதனன் குருசேத்திரப் போருக்கு முன்பு, தனக்கான வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காகப் பாண்டவர்களில் சகாதேவனிடம் ஜோதிடம் கேட்கச் சென்றான் துரியோதனன். போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும் எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், முழு அமாவாசை அன்று போரைத் தொடங்கினால் வெற்றி உறுதி என்றார். துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான்.
அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளேத் தர்ப்பணம் செய்யத் தொடங்கினார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேரும் நாள்தான் அமாவாசை. ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே… இது முறையானதா? என்றனர்.
அதற்குக் கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள். எனவே, இன்று தான் அமாவாசை… என சமயோசிதமாகப் பதில் சொல்லி விட்டார். துரியோதனனோ, சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான். ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்திருக்கும் ஒரு கோயில் இருக்கிறது. இக்கோயிலில் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் அமாவாசை நாளில் செய்யும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய முடியும். ஆமாம், திருவாரூர் மாவட்டம், செதலபதி முக்தீஸ்வரர் கோவில். இங்கிருக்கும் முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இருவரும் சேர்ந்தே இருப்பதால், இதை நித்ய அமாவாசை தலம் என்கின்றனர். இக்கோவிலில் முன்னோர் வழிபாடு (பிதுர் தர்ப்பணம்) செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என எதையும் பார்க்க வேண்டியதில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.
ஆடி அமாவாசை நாள், முன்னோர் வழிபாட்டுக்கு (பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு) சிறந்த நாளாக இருப்பது சரி. அமாவாசைக்கு முந்தைய நாளும் சிறப்பானது என்பதற்கும் ஒரு கதை இருக்கிறது. வாங்க, அந்தக் கதையைத் தெரிந்து கொள்ளலாம்...
அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன். பராக்கிரமம் மிக்க அவனுக்கு வாரிசு இல்லாத வருத்தம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள அவன் தன்மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அதன் பலனாக அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். மன்னன் மகிழ்ச்சியோடு இருந்த போது ஓர் அசரீரி எழுந்தது. அவனது மகன், இளமைப் பருவத்தை எட்டும் போது இறந்து போவான் என்றது அந்த அசரீரி. அதனைக் கேட்ட மன்னன் விரக்தியில் ஆழ்ந்தான். மன அமைதிவேண்டி அவன் பல கோயில்களுக்கும் சென்றான். ஒருநாள் காளி கோயில் ஒன்றின் அவன் வழிபட்ட போது, உன் மகன் இறந்ததும் அவனுக்குத் திருமணம் செய்து வை. அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.
இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான். மன்னன் அவனுக்கு மணம் முடிக்கப் பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள். விடிந்த பின் உண்மை தெரிய வந்ததும் அழுதாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள். அவளது அழுகுரல் கேட்டு பார்வதி தேவி இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று எழச் செய்தாள்.
இந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாளில். தனக்கு அருளிய தேவியிடம் அந்தப் பெண் இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்தது போலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள். அதனைக் கேட்டு மகிழ்ந்த அம்பிகை, ஆடி மாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்குச் சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அனைத்து வளங்களும் நிறைந்திருக்கும் என்றும் சொல்லி மறைந்தாள். அன்றிலிருந்து ஆடி அமாவாசை முதன்மை பெற்றது என்பார்கள்.
ஆடி அமாவாசையின் சிறப்புகளாக, மேலும் சில செய்திகள் சொல்லப்படுகின்றன. அவை;
* ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறான். கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம், ஆடி அமாவாசையின் போது சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனுடன் ஒன்று சேர்வதால் சந்திரனின் ஆட்சி பலமடைகிறது. ஆகவேதான், ஆடி அமாவாசை வழிபாட்டுக்கு உகந்த நாளாக இருக்கிறது என்றும் சொல்வதுண்டு.
* ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
* ஆடி அமாவாசையில் இராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது. அக்னி தேவனே நீராடிய தினம் இது என்பது நம்பிக்கையாக உள்ளது. ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய அடுத்த நொடியே அக்னிதேவன் அலறினான். சீதாதேவியின் கற்புக்கனல் அவனைச் சுட்டெரித்தது. சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப்பெயர் வந்தது. அக்னி நீராடிய கடலில் நீராடுவோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.