இந்து சமய வழிபாட்டில் தெய்வங்களுக்குத் தேங்காய், வாழைப்பழம் படைத்து வழிபடுகிறார்களே... இது ஏனென்று தெரியுமா?
எந்தவொரு பழமும் சாப்பிட்டுவிட்டு, அதன் கொட்டையினைத் தரையில் போடும் போது, அது மீண்டும் முளைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, அல்லது முழுமையாகவோ வீசினாலும் அது முளைப்பதில்லை. இது பிறவியற்ற முக்தி நிலையைக் காட்டுகிறது. எனக்கு மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என்று தெய்வத்திடம் வேண்டுவதற்காகவே, வாழைப்பழத்தைப் படைத்து வழிபடுகின்றோம்.
வாழைப்பழம் போன்றேத் தேங்காய்க்கும் அந்தக் குணமுண்டு.
தேங்காயைச் சாப்பிட்டு விட்டுத் தரையில் போட்டாலும், அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து மட்டுமே தென்னைக் கன்று தோன்றி வளர்ந்து மரமாகிறது. இதே போன்று, வாழைப்பழத்திலிருந்து வாழை தோன்றுவதில்லை. வாழை மரத்திலிருந்து கன்று தோன்றி வளர்ந்து வாழை மரமாகிறது.
இதனால், எவ்வகையிலும் மனிதர்கள் எச்சில்படாததாகத் தேங்காய், வாழைப்பழம் ஆகியவை உருவாகி இருப்பதால், அதனைத் தெய்வங்களுக்குப் படைக்கும் வழிமுறையினை நம் முன்னோர்கள் உருவாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.