அமிர்தம் தேடிப் பாற்கடலைக் கடையும் பொழுது, அதிலிருந்து தோன்றிய உயர்ந்த பொருட்களில் சங்கும் ஒன்று. குறிப்பாக, வலம்புரிச் சங்கு மிகவும் உயர்ந்தது. மகாலட்சுமிக்கு சமமானது, ஏனெனில் மகாலட்சுமியும் பாற்கடலிலிருந்து தோன்றியவள். இதனால், வலம்புரிச் சங்குவை "லக்ஷ்மி சகோதராய" என்றும் அழைப்பர். இதனை அடிப்படையாகக் கொண்டே, மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கைத் தனது கரத்திலும், மஹாலட்சுமித் தாயை இதயத்திலும் தாங்கியபடி காட்சியளிக்கிறார்.
வலம்புரிச் சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. அதனை வடக்கு முகமாக அல்லது கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு வாழை இலையில் கொஞ்சம் பச்சரிசி பரப்பி, அதன் மேல் சங்கை வைத்து மந்திரத்தைச் சொல்ல வேண்டும் அல்லது ஒரு மஞ்சள் பட்டு அல்லது மஞ்சள் பருத்தித் துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து, அதன் மேல் சங்கை வைத்து அதற்குச் சந்தனம், குங்குமம் வைத்து மல்லிகை, பிச்சி, ரோஜா அல்லது செந்தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து மந்திரங்கள் சொல்லலாம் அல்லது சாம்பிராணி அல்லது ஊதுவத்தியால் தூபம் காட்டி, கற்பூர தீபம் காட்டிக் கற்கண்டு, பால் நைவேத்யம் செய்து வழிபடலாம். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வு வளமடையத் தேவையான அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் எனும் நம்பிக்கை இருக்கிறது.
பூஜை செய்யும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் சங்கை மஞ்சள் பட்டு அல்லது பருத்தித் துணியில் சுற்றி வைக்கலாம். சிறிய பித்தளை, வெள்ளி, செம்புத் தட்டு அல்லது கிண்ணத்தில் சுத்தமான நீர் ஊற்றி, அதில் சிறிது பச்சைக்கற்பூரம் போட்டு, அதில் வைக்க நல்ல பலன்களைத் தரும். அந்த நீரைத் தினமும் மாற்ற வேண்டும். முந்தைய நாளில் பயன்படுத்திய நீரைக் குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வறுமை நீங்கும். குளிக்க முடியாதவர்கள் அந்த நீரைக் காலில் மிதிபடாதபடி மரம் அல்லது செடிகளுக்கு ஊற்றி விடலாம். தொழில் செய்யும் இடங்களில் அந்நீரைத் தெளித்து வந்தால், செய்யும் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். வணிகர்கள் அந்த நீரால் முகம் கழுவி வெளியில் செல்ல, அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி கிடைக்கும்.
வழிபாட்டுக்குரிய வலம்புரிச் சங்கு வாங்கும் பொழுது கீழ்க்காணும் தகவல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. கரும்புள்ளிகள், கருப்பு நிறத்தில் குழிகள் இருக்கக் கூடாது.
2. செயற்கை நிறங்கள் பூசப்பட்டதாக இருக்கக் கூடாது.
3. வெடிப்பு, கீறல் இல்லாததாக இருக்க வேண்டும்.
4. வாய்ப்பகுதி மற்றும் பிற பகுதிகள் சேதமடையாததாக இருக்க வேண்டும்.