ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை, அதனால்தான் ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு கால வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். ராகுவுக்கு உடலில்தான் விஷம் இருக்கிறதேயன்றி, வாலில் அமிர்தம் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் மறையும் அந்தி நேரத்திற்கு முன்பு, ராகுவின் வால் பாகம் அமிர்தமாக இருக்கும். அதாவது, ஞாயிறன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் துர்க்கையை வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நிறைவேறும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 - 6.00 ராகு கால வேளையில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சைப் பழத்தினை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்றவேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாகத்தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியபடி விளக்கு இருக்க வேண்டும்.
இந்தப் பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகைப் பூ அல்லது மஞ்சள் சாமந்திப் பூ மட்டுமே வைத்திட வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால், அம்மன் பெயரிலேயே அர்ச்சனை செய்து,அ தன் பின்னர், விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னர் 3 சுற்றுகள், வலம் வந்து வணங்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது, துர்க்கைப் பாடல்கள் சொல்லியபடி இருக்க வேண்டும். அதன் பிறகு, கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிச்சையிடக் கூடாது. ராகுவால் உண்டான கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவக்கிரகம் சுற்ற வேண்டியதில்லை.
வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, ஐந்து ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்ய வேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை, வெளியில் எங்கும் செல்லக்கூடாது. இவ்வாறு ஒன்பது வாரங்கள் செய்து வந்தால் வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.