தீர்க்கதமஸ் என்ற முனிவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து வேண்டினார். ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார்.
அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றைக் கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் உள்ளன. இவை மேலும் மனிதனைத் துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்குச் சுலபமான வழி ஏதும் இல்லையா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும்தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் எனப் போதித்தார்.
இந்த விரதத்தை எப்படிப் பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்க, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் வேண்டி, அகால மரணம் சம்பவிக்காமல் காக்கும்படி வேண்டிட வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே, நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளை வேண்டிட வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்குப் பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெய்யில் லட்சுமி தேவியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்குக் கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தினரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள் என்றார்.
எனவேதான் தீபாவளியன்று மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்தி வழிபடுகிறோம்.