முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் முதன்மையானவையாகும். கந்தசஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும், வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகியவைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத நடைமுறைகளைப் போலன்றி கந்த சஷ்டி விரத நடைமுறையை பெரும்பான்மையான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கடைப்பிடிக்கின்றனர். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப்பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தைப்பேறு வேண்டியும் இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஞானசக்திக்கும் அசுரசக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். சிவபெருமான் அதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப்பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப்பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். அந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வந்தனர். இதுவே, கந்த சஷ்டி என்ற பெயரில் பூலோகத்தினரும் கடைப்பிடிக்கக் கிடைத்தது என்கின்றனர்.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்
கந்தசஷ்டி விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அடித்தளமாக கந்த சஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.
இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருக்க வேண்டும். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒரு பொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது, அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் சொல்லியபடியே கிரிவலம் வருவது கூடுதல் நன்மையைத் தரும்