சபரிமலை ஐயப்பப் பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
ஹரிவராசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு வேளையில், நடையடைப்புக்கு முன்பு ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது. சபரிமலையில் இறைவன் ஐயப்பன் உறங்கச் செல்வதற்கு முன் இசைக்கப்படும் இந்தத் தாலாட்டுப் பாடல் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர் என்பவர் இயற்றி இசை அமைத்துப் பாடியதாகும். ஐயப்பன் சந்நிதியில் சுவாமி அத்தாழ பூசைக்குப் பிறகு, இந்தத் தாலாட்டுப் பாடலை இசைக்கக் கோயில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கோயில் நடையில் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பாடிய பாடல் ஒலிபரப்பப் படுகின்றது. அவ்வேளையில், பக்தர்கள் மட்டுமல்லாமல், அரசுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களும், வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் எழுந்து நின்று மரியாதை செய்கின்றனர்.
இருமுடி வண்ணங்கள்
சபரிமலைக் கோவிலுக்குப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள், இறைவனுக்குப் படைப்பதற்கான பொருட்களை வைப்பதற்கு இரு அறைகள் கொண்ட பருத்தித் துணியில், கைகளால் தைக்கப் பெற்ற பையினை பள்ளிக்கட்டு அல்லது இருமுடி என்று சொல்கின்றனர். இந்த இருமுடியில் பக்தர்கள் கொண்டு வரும் நெய்யைக் கொண்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய்யபிசேகம் செய்யப்படுகிறது. சபரிமலைக்கு முதல் முறையாகப் புனிதப் பயணம் செல்லும் பக்தர்கள் குங்குமப்பூ நிறம் கொண்ட இருமுடியையும், மற்றவர்கள் கருப்பு அல்லது நீல வண்ணத்திலான இருமுடிகளைப் பயன்படுத்துகின்றனர்.
மண்டல விரதம்
சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை 41 நாட்கள் விரதம் இருந்து வழிபட வேண்டும் என்பது ஒரு நடைமுறையாக இருக்கிறது. மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது. அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த நாட்கள் முழுவதும் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.
கோயிலுக்குக் காப்பீடு
திருவாங்கூர் தேவஸ்வம் வாரியம், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலைச் சுமார் 30 கோடி ரூபாயளவில் ($7 மில்லியன்) காப்பீடு செய்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த இடத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு விபத்துகளில் இருந்து இலவசக் காப்பீடு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறது. நீலக்கல்லில் இருந்து மலையேற்றப் பாதையில், சன்னிதானம் சென்றடையும் வரையிருக்கும் 18 ýகிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் வரும் பக்தர்களில், விபத்துக்குள்ளாகி காயமடைவோர் மற்றும் உயிரிழப்பவர்களுக்குச் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக வழங்க முடியும்.
சபரிமலை செல்ல
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வதற்குப் பல வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதி நகரங்களான குமுளி, செங்கோட்டை ஆகிய ஊர்களின் வழியாகவேப் பெரும்பான்மையானவர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர். குமுளி வழியில் செல்பவர்கள், அங்கிருந்து வண்டிப்பெரியார், எருமேலி, பிலாப்பள்ளி ஆகிய ஊர்களின் வழியாக சுமார் 176 கிலோ மீட்டர் தூரமும், செங்கோட்டை வழியில் செல்பவர்கள் அங்கிருந்து புனலூர், பத்தனம்திட்டா வழியாகச் சுமார் 166 கிலோமீட்டர் பயணித்தும் பம்பையை அடையலாம். பம்பையிலிருந்து நான்கு கிலோ மீட்டர் மலைப்பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டும். ஐயப்ப பக்தர்களில் சிலர் எரிமேலி வரை சென்று, அங்கிருந்து மரபுவழியில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையில் நடந்து சபரிமலைக்குச் செல்கின்றனர்.
ஐயப்பன் சிலை
சபரிமலையில் பரசுராமரால் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் ஐயப்பன் சிலை 1950 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீவிபத்தில் சேதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும்? என்று தேவப்பிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதி முன்பாகச் சீட்டுப் போட்டுப் பார்க்கப்பட்டது. அதில், மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் பி. டி. ராஜன் ஆகியோர் பெயர்கள் வந்தன. அவர்களிருவரும் அதனை ஏற்று, கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலையில் இருந்த தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியைக் கொண்டு புதிய ஐயப்பன் சிலையை உருவாக்கச் செய்து சபரிமலைக்கு வழங்கினர். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.