கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணம்புழா கோவிலின் வடக்குப் பகுதியில், தெக்கேடத்து மனையின் வளாகத்தில், கண்ணம்புழா பகவதி கோவிலின் துணைத்தேவதை எனப் போற்றப்படும் பாறைப்புறத்து பகவதி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் இங்கு ஏன் அமைக்கப்பட்டது ஏன்? என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.
முந்தைய காலத்தில் ஒரு நாள், தெக்கேடத்து மனையைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கொட்டியூர் கோயிலில் நடைபெறும் பூசையில் கலந்து கொண்டு, வீடு திரும்பச் சிறிது காலதாமதமாகி விட்டது. அடர்த்தியான காட்டுப்பகுதி வழியாக, இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த அவர் அச்சத்தில் நடுங்கியதுடன், வழி தெரியாமலும் தடுமாறினார்.
உடனே அவர், கண்ணம்புழா பகவதி தேவியை மனதில் நினைத்து வணங்கியபடி சென்றார். அப்போது, சிறிது தொலைவில் அவருக்கு முன்பாக ஒரு பெண் கையில் விளக்கு ஏந்திச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரும் அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து நடந்து சென்றார்.
எந்த ஆபத்தும் இல்லாமல் காட்டில் இருந்து பாதுகாப்பாக மனைக்கு சென்ற அவர், தனக்கு வழிகாட்டியாய் வந்த பெண், கண்ணம்புழா பகவதி என்பதை அறிந்து, தனக்கு வழிகாட்டிய உருவத்தை மனதில் கொண்டு தேவி உருவச்சிலை ஒன்றைச் செய்து, தனது மனையின் வளாகத்தில் இருந்த பாறையின் மீது நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். பிற்காலத்தில் அந்தப் பகவதி அம்மன், பாறைப்புறத்து பகவதி அம்மன் என்று அழைக்கப்பட்டார்.
இந்தக் கோயிலில், மலையாள நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு பூஜை செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.