செங்கன்னூர் பகவதி கோயில் வரவு - செலவு கணக்குகளை ஆய்வு செய்த திருவிதாங்கூர் பகுதி ஆங்கிலேய அதிகாரி மன்றோ, கோயிலில் திருப்பூத்தாறாட்டு விழாவிற்குச் செய்யப்பட்ட செலவுக்கணக்கு மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லி, செலவைக் குறைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அதன் பிறகு, ஆடி மாதத்தில் பகவதியம்மனுக்கு திருப்பூத்து உண்டானது. அதே வேளையில், மன்றோவின் மனைவிக்கும் இரத்தப் போக்கு ஏற்பட்டது. எத்தனையோ மருத்துவர்கள் முயன்றும், அவருக்கு ஏற்பட்ட இரத்தப் போக்கை நிறுத்த முடியவில்லை. அதனால் கவலையடைந்த மன்றோ, தனது கீழ் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் ஜோதிடர் ஒருவரை அழைத்துக் கலந்தாலோசிக்கலாம் என்றனர். அதன்படி அங்கு ஜோதிடர் வரவழைக்கப்பட்டார். அவர் நடந்தவைகளையெல்லாம் கேட்டறிந்து, சில கணிப்புகளைச் செய்து, மன்றோ செங்கன்னூர் பகவதி கோயில் திருப்பூத்தாறாட்டுச் செலவுகளைக் குறைக்கச் சொன்னதன் விளைவாகவே, அவரது மனைவிக்கு நிற்காத இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்.
உடனே மன்றோ, அவ்விழாவிற்குத் தேவையான செலவுகளை விருப்பம் போல் செய்யலாம் என்று உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு இரத்தப் போக்கு நின்று நலமடைந்தார். அதனைத் தொடர்ந்து, மன்றோ, செங்கன்னூர் பகவதியம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இரண்டு தங்க வளையல்களை அம்மனுக்கு வழங்கி வழிபட்டுச் சென்றார். இன்றும், திருப்பூத்தாறாட்டு விழாவின் போது, அந்த வளையல்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு வருகின்றன