சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் வடிவமான சதிதேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களாகும்.
சக்தி பீடம் என்பதற்கு, சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும்.
அவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ஆதிசக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன.
சக்தி பீடங்கள் அனைத்தையும் கண்டு வழிபட முடியாவிட்டாலும், ஆதிசக்தி பீடங்கள் நான்கையாவது பார்த்து வழிபட வேண்டும் என்கின்றனர்.
அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்திபீடக் கோவில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதிசக்தி பீடங்களாக இருக்கின்றன.
எந்த சக்தி பீடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டுமென்கிற நடைமுறை இருக்கிறது.
தேவி பாகவதம் என்ற நூல், அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானது என்றும் கூறுகிறது.
ஆனால், தந்திர சூடாமணியில், 51 சக்தி பீடங்கள் என்பது தெளிவாக இருக்கின்றன.
அதனால், இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் சொல்கின்றனர்.