கோயில் மற்றும் வீடுகளில் பூஜை செய்யும் போது, மணி அடிப்பது வழக்கமாக இருக்கிறது. இந்த மணியைப் பயன்படுத்தும் போது, எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது. மணியை வலது கையில் எடுத்துப் பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு, வலது கையால் கற்பூரத் தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும். இதே போன்று, மணியைக் கீழே வைக்கும் போதும் இடது கையால் வைக்காமல் வலது கையில் மாற்றிக் கீழே வைக்க வேண்டும்.
பொதுவாக, மணியை ஒரே மாதிரியாக அடிப்பதில்லை. கோயிலில் மணி அடிக்கும் முறையில் தனித்தனிப் பொருள் இருக்கிறது.
* மெதுவாகா மணியை அடித்தால் தெய்வத்துக்கு அகர்பத்தி சமர்ப்பிக்கப்படுகிறது என்று பொருள்.
* கணகணவென்று அடித்தால் சாமிக்கு தீபம் அல்லது தூபம் காட்டப்படுகிறது என்று பொருள்.
* இரண்டு பக்கமும் சிறப்பாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று பொருள்.
* மெதுவாகச் சீராக அடித்தால் தெய்வத்துக்கு அமுது படைக்கப்படுகிறது என்று பொருள்.
இப்படி மணி அடிக்கும் முறையைக் கொண்டேக் கோயிலில் நடக்கும் பூஜைகள் என்னவென்று தெரிந்து கொள்ள முடியும். மேலும், மணி அடிப்பதால் வரும் ஓசையில், வழிபாட்டில் பங்கேற்பவர்களின் மனம் தெய்வத்திடம் ஒன்றி விடுகிறது. மணியோசை எழுப்புமிடங்களில் இருக்கும் தீயசக்திகள் அகன்று நல்லவை கிடைக்கும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.